நேற்று சென்னை மெரினா கடற்கரையில் திடீரென கடல்நீர் உள்வாங்கியதால் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளானார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் பழைய நிலைக்கு வந்ததும், நிம்மதி அடைந்தனர்.
சுனாமிக்குப் பிறகு, அவ்வப்போது கடல் உள்வாங்குவதும், கடல் சீற்றமும் அதிகரித்து வருகிறது. திருச்செந்தூரில் அடிக்கடி கடல் உள் வாங்குவதும், மீண்டும் பழைய நிலையை அடைவதுவமாக உள்ளது.
அதேப்போல, சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பட்டினப்பாக்கம் ஆகிய கடற்பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக கடல் கொந்தளிப்பு இருந்து வருகிறது. கடல் கொந்தளிப்பு காரணமாக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் மட்டும் இதுவரை 50-க்கும் மேற்பட்ட வீடுகளும், ஒரு தேவாலயமும் சேதமடைந்துள்ளன.
கடற்கரைக்கும், குடியிருப்புக்கும் இடையே 50 அடி தூரம் இருந்தது. ஆனால் தற்போது கடற்பகுதி அதிகமாகி குடியிருப்பு வரை கடல் நெருங்கி வந்துவிட்டது. மேலும், கடலில் பேரலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நேற்றும் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. கடல் அலையின் சீற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்ததால் கடற்கரையை சுற்றி பார்க்க வந்த பயணிகள் பயந்தனர். பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
நேற்று மாலை திடீரென மெரினா கடல் சுமார் 15 அடி தூரம் வரை உள்வாங்கியது. இதனால், கடற்கரையை சுற்றிப்பார்க்க வந்த பயணிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். சுமார் அரை மணி நேரம் வரை கடல் நீர் உள்வாங்கியிருந்தது. பிறகு கடல்நீர் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியது. அதன்பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர்.