கொடைக்கானலில் தற்போது செப்டம்பர் மாத சீசன் களைக்கட்டியுள்ளது. ஏராளமான பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.
குளிர்ச்சியான மலைப் பிரதேசம் என்றதும் நினைவுக்கு வரும் கொடைக்கானலுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
பொதுவாக கொடைக்கானலில் மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசன் காலமாகும். கடந்த சீசன் காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்திருந்தனர்.
தற்போது ஆப்சீசன் எனப்படும் செப்டம்பர் மாத சீசன் தொடங்கியுள்ளது. இதுபோன்ற சீசன் காலங்களில் கொடைக்கானலில் அதிகாலை முதல் மாலை வரை குளிர் காற்று வீசும். அங்கு எப்போதும் தட்பவெப்பம் இதமாக இருக்கும். இதனை அனுபவிக்க கடந்த 3 நாட்களாக வெளி மாநில பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இந்த சீசன் சமயத்தில் தமிழகத்தில் மழை அல்லது நல்ல தட்பவெப்பம் நிலவும். ஆனால் இந்த ஆண்டு சென்னை உள்ளிட்ட இடங்களில் வெயில் வாட்டி எடுப்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கிப் படையெடுக்கின்றனர்.
கொடைக்கானல் பிரையன் பூங்கா, ஏரி, குறிஞ்சி ஆண்டவர் கோயில் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பொதுவாக கோடைக்காலத்தில் மட்டுமே கொடைக்கானலில் சுற்றுலா களை கட்டும் காலம் மலையேறிப் போய்விட்டது. தற்போதெல்லாம் ஆண்டு முழுவதுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக இருந்து கொண்டுதான் உள்ளது. அதிலும், தற்போது துவங்கியுள்ள இந்த சீசனில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
எனவே நீங்கள் கொடைக்கானல் செல்வதென்றால் முறையான ஏற்பாடுகளை செய்து கொண்டு செல்லுங்கள். உங்களது சுற்றுலாப் பயணம் இனிதாக அமையும். இல்லாவிட்டால் 4 நாட்கள் செலவிட வேண்டிய பணம், விடுதிக்கும், வாகனத்திற்கும் ஒரே நாளில் செலவாகிப் போகவும் வாய்ப்புண்டு.