கோடை விடுமுறைக்கு சுற்றுலா வரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் குன்னூர் கோத்தகிரியில் நேற்று காய்கறி கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியை கதர் வாரிய அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார்.
நுழைவாயிலில் காய்கறி அலங்கார வளைவு, தோகை விரித்த மயில்கள், 10 ஆயிரம் கார்னேஷன் மலர்களால் 12 அடி உயர ராட்சத ஜாடி, 600 காலி பிளவர்களைக் கொண்ட ராட்சத தட்டு, ஜெர்பரா மலர்களால் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. இவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
பூங்கா வளாகத்தில் அரசு மற்றும் தனியார் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. பாகற்காய் டைனோசர், முதலை, கேரட் ஓணான், பூசணிக்காய் விநாயகர், காய்கறி சேவல், வெள்ளரி, முள்ளங்கி முயல், சுரைக்காய் மீன், வாத்து வடிவமைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் பூங்கா வளாகத்தில் குவிந்தனர். இன்று மாலை வரை காய்கறி கண்காட்சி நடக்கிறது.