தினத்தந்தி-வி.ஜி.பி. இணைந்து நடத்தும் கோடை விழாவில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நாளை மாபெரும் கோலப்போட்டி நடைபெற உள்ளது.
கோலப்போட்டியில் வெற்றி பெறும் பெண்களுக்கு தங்க காசுகள் பரிசாக வழங்கப்பட உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் வி.ஜி.பி. தங்க கடற்கரையில் கோடைவிழா என்ற பெயரில் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா கொண்டாட்டங்கள் கடந்த வாரம் தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது வார நிகழ்ச்சியாக கோலப்போட்டி நடக்க இருக்கிறது. வி.ஜி.பி. தங்க கடற்கரையில் உள்ள பன்னீர்கோட்டையில் பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 15 முதல் 30 வயது வரையுள்ள பெண்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்கிறவர்கள் போட்டிக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் கொண்டுவர வேண்டும்.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறவர்களுக்கு முதல் பரிசு 8 கிராம் தங்க காசு. இரண்டாம் பரிசு 6 கிராம் தங்க காசு. மூன்றாம் பரிசு 4 கிராம் தங்க காசு. போட்டியில் கலந்துகொள்கிறவர்களில் ஏராளமானவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.
போட்டியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் வி.ஜி.பி. தங்க கடற்கரையில் அமைந்துள்ள தினத்தந்தி கவுண்ட்டரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்திட வேண்டும். கோலப்போட்டிக்கு டாக்டர் எம்.லதாராணி நடுவராக இருப்பார்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை (10-ந் தேதி) மெகந்தி தீட்டும் போட்டி நடக்கிறது. கலந்துகொள்ளலாம். 17-ந் தேதி லட்சிய தம்பதிகள் போட்டி நடக்க இருக்கிறது. இதற்கு பிரபல டாக்டர்கள் டி.காமராஜ் மற்றும் கே.எஸ்.ஜெயராணி ஆகியோர் நடுவராக இருப்பார்கள்.
இந்த போட்டியில் 21 முதல் 35 வயதுவரையுள்ள தம்பதிகள் கலந்துகொண்டு பரிசுகளை வெல்லலாம். மே 24-ந் தேதி வினாடி-வினா போட்டியும், மே 31-ந் தேதி புதையல் வேட்டை போட்டியும் நடக்க இருக்கிறது.
போட்டியில் கலந்துகொள்கிறவர்களுக்கு நுழைவு கட்டணம் திரும்பத்தரப்படும்.