நமது நாட்டில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அருவிகளைப் பார்க்கலாம். ஆனால் குற்றால அருவிகளுக்கு இணையான அருவி ஒன்றைக் காண்பது அபூர்வம்.
குற்றாலத்தின் பேரருவியாக இருந்தாலும், அதன் மேல் பகுதியிலுள்ள செண்பகாதேவி அருவியானாலும், ஐந்தருவியானாலும், பழைய குற்றாலம் ஆனாலும், இந்த அருவிகள் எதுவும் பெரும் உயரத்தில் இருந்து ஒரு தூண் போல தண்ணீரைக் கொட்டி நம்மை பிரமிப்பில் ஆழ்த்தவில்லை.
நயாகராவைப் போல அச்சமூட்டும் அளவிற்கோ அல்லது கேரளத்தில் சாலக்குடி ஆற்றின் போக்கிலுள்ள அதிரம் பள்ளி போன்று ஒரு அழகிய இயற்கை சூழலில் உள்ளதோ அல்ல குற்றால அருவிகள்.
ஆயினும் குற்றால அருவியை இவ்வளவு சிறப்புடன் போற்றப்படுவதற்கு காரணம்: அதன் அருவி நீர் உடலிற்கு நன்மை பயப்பது, குற்றாலச் சூழல் மனதிற்கு இதமளிப்பது. இதனால்தான் குற்றாலத்தில் குளித்து ஊறியவர்கள் எவரும், வேறு எந்த அருவியிலும் குளிக்க முற்படுவதும் இல்லை, போற்றுவதும் இல்லை.
தமிழர் பாரம்பரியத்திலும், வரலாற்றிலும், இலக்கியத்திலும் போற்றப்படும் பொதிகை மலையைத் தழுவி ஓடிவரும் குற்றால அருவி நீர், அதன் வழியிலுள்ள பல மூலிகைச் செடிகளைத் தழுவி ஓடி வருவதால்தான் அதற்கு இந்த தனித்த மகிமை இருப்பதாகக் கூறுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எவராயினும் குற்றால அருவிகளில் குளித்து குறை கூறியவர் எவருமில்லை! மழை பொய்த்துப் போகும் காலங்களில் போதுமான அளவிற்கு அருவியில் நீர் கொட்டவில்லையே என்று ஒரு குறைபாடல் தவிர, குற்றால அருவிகளை கொஞ்சாதவர்களை காண்பதரிது.
அப்படியென்ன குற்றால அருவிகளுக்கு சிறப்பு என்று இதற்கு மேலும் கேட்பவர்கள், ஒரு முறை குற்றாலத்திற்குச் சென்று அங்குள்ள அருவிகளில் குளித்து நீராடிவிட்டு, அன்றோ அல்லது மறுநாளோ செங்கோட்டைக்கு அப்பால் தமிழ்நாடு எல்லையைத் தாண்டிசென்று கேரளத்திலுள்ள பாலாறு அருவியில் குளித்துவிட்டு வாருங்கள், அந்த வேறுபாடு தெரியும்.
செங்கோட்டை கணவாயின் சிறப்பு!
தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் இடையே பெரும் அரணாய் நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில், இரு மாநிலங்களுக்கும் இடையே சாலை, இரயில் வழிகளை இரண்டு கணவாய்கள்தான் தருகின்றன. வடக்கே பாலக்காடு கணவாய், தெற்கே செங்கோட்டை கணவாய்.
50 கி.மீ. தூரமுடைய செங்கோட்டை - புனலூர் கணவாய் பாதையில் பயணம் செய்வதே ஒரு தனி அனுபவம்தான்.
|
webdunia photo | K. AYYANATHAN |
|
இந்த செங்கோட்டை கணவாய் வழியாக எப்போதும் வீசிக் கொண்டிருக்கும் மலைக் காற்றுத்தான் அப்பகுதியை எப்போதும் வசந்த நிலையில் வைத்திருக்கிறது. செங்கோட்டை - தென்காசிப் பாதையில் பொதிகை மலையை ரசித்துக் கொண்டு நடந்து செல்வதும் அனுபவிக்கத்தக்கதாகும்.பார்டர் பரோட்டா கடை!குற்றாலத்தின் இயற்கை சிறப்புகளோடு ஒரு பாரம்பரிய சிறப்பும் உள்ளது. அங்கு எத்தனை உணவகங்கள் இருந்தாலும், புதிதாக வந்தாலும், எல்லோராலும் குறிப்பிடத்தக்கதாக உள்ள உணவகம் பார்டர் பரோட்டாக் கடை!அந்த நாளில் குற்றாலம் திருவிதாங்கூர் அரசாட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தபோது குற்றாலம்தான் எல்லைப் பகுதியாக இருந்தது. அந்த பழைய எல்லைப் பகுதியில் இருப்பதால் இந்த உணவுக் கடைக்கு பார்டர் கடை என்று பெயரானது.இங்கு, வேரெங்கும் இல்லாத அளவிற்கு பரோட்டா மிக மென்மையாக உள்ளது. பரோட்டாவோடு அளிக்கப்படும் குழம்பும் மிக ருசியானது. இதோடு அசைவ வறுவல்களும் இக்கடையில் விசேடமான தயாரிப்புகளாகும்.
|
webdunia photo | K. AYYANATHAN |
|
நெல்லைக்கு இணையாக சைவ உணவு தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வேறு எங்கேயும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அங்குள்ள மக்களின் சைவ உணவை சாப்பிட்ட எவருக்கும் அசைவ உணவு தேவைப்படாது. ஆனால் அப்படிப்பட்ட பாரம்பரிய பூமியில் ஒரு பரோட்டாக் கடைக்கு ஏன் இத்தனை சிறப்பு என்பதை அங்கு சென்று சாப்பிட்டுப் பார்த்துதான் அறிந்து கொள்ள வேண்டும்.குற்றாலப் பருவம்: கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை துவங்கியதும் குற்றால அருவிகளில் நீர் பெருகத் தொடங்கிவிடும் என்றாலும், அங்கு சென்று அருவிகளில் குளித்து அனுபவிக்கவும், மிகக் குளிர்ந்த வெப்ப நிலையை அனுபவிக்கவும் உகந்த பருவம் ஜூலை இறுதியில் இருந்து செப்டம்பர் 15ஆம் தேதி வரையாகும். தமிழ் மாதம் ஆவணி இறுதிக்குள் குற்றாலம் சென்று வருவது சிறந்தது.தங்குமிடங்கள்: செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் என மூன்று இடங்களிலும் தங்குமிட வசதி ஏராளமாகவுள்ளது. போக்குவரத்திற்கும் குறைவில்லை.
விழாக்கள்: குற்றாலம் சாரல் விழா. மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழியும் போது அங்கு வீசும் காற்றினால் சிலு சிலுவென்று எப்போதும் ஒரு சாரல் குற்றாலத்தில் பொழியும் அந்தப் பருவத்தில் இந்த விழா தமிழக சுற்றுலாத் துறையால் நடத்தப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்