வெளிநாட்டுப் பயணிகளை அதிகம் கவரும் வகையில் சிற்பங்கள் நிறைந்திருக்கும் மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நவீன வசதிகள் கொண்ட குழல் மூங்கில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் கட்டப்பட்டு உள்ள குழல் மூங்கில் குடில்களையும், புதுப்பிக்கப்பட்ட அறைகளையும் சுற்றுலா துறை அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் திறந்துவைத்தார்.
மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக வளாகத்தில் 5 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் ரூ.50 லட்சம் செலவில் குழல் மூங்கில் குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து கொண்டே இருப்பதை கருத்தில் கொண்டு பழைய சிக்கன 20 குடில்கள் ரூ.2 கோடியே 75 லட்சம் செலவில் 40 குடில்களாக புதுப்பிக்கப்பட்டு உள்ளன. புதுப்பிக்கப்பட்ட குடிலின் ஒருநாள் வாடகை (காலை சிற்றுண்டி, நீச்சல்குளம் பயன்பாடு உள்ளிட்ட வசதிகளுடன்) ரூ.1,750 (வரிகள் தனி).
புதுப்பிக்கப்பட்ட குடில்கள், புதிதாக அமைக்கப்பட்டு உள்ள குழல் மூங்கில் குடில்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். இந்த விழாவில், சுற்றுலா துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் கலந்துகொண்டு, குழல் மூங்கில் குடில்களையும், புதுப்பிக்கப்பட்ட குடில்களையும் திறந்து வைத்தார்.
அமைச்சர் சுரேஷ்ராஜன் இது குறித்துக் கூறுகையில், ``மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருப்பதால் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப 2 படுக்கையுடன்கூடிய 40 குடில்கள் ரூ.2 கோடியே 75 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. மாமல்லபுரத்தில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்தி இருக்கிறோம். இதனால் கேரளாவில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை, இப்போது தமிழ்நாட்டிலே கிடைக்கிறது'' என்று குறிப்பிட்டார்.
மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கவும், உடல் நலத்தை பேணவும் ஆயுர்வேத சிகிச்சை, கொரிய நாட்டு சிகிச்சை வசதிகளுடன் குழல் மூங்கில் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. தமிழக சுற்றுலா துறை, திருச்சி சங்கரா ஆயுர்வேத கல்லூரியும் இணைந்து நாட்டிலே முதன்முறையாக குழல் மூங்கில் வீடுகளை தொலைக்காட்சி, குளிர்சாதன வசதியுடன் நேர்த்தியாக கட்டியுள்ளது. இரண்டு படுக்கை கொண்ட மூங்கில் குடிலின் ஒருநாள் வாடகை ரூ.1,500 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த குடில் முழுவதையும் குழல் மூங்கிலாலே கட்டியிருக்கிறார்கள். அடித்தளம் போட்டு அதன்மேலே குழல் மூங்கில்களை வரிசையாக அடுக்கி, கம்பிவலை விரித்து அதன்மீது சிமெண்ட் கலவை போட்டு சுவர் எழுப்பியிருக்கிறார்கள். வீட்டின் மேற்கூரை, கதவு, டேபிள், தட்டு, சாவிக் கொத்து போன்றவையும் மூங்கிலாலே செய்யப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 19 `குழல் மூங்கில்' குடில்கள் இருக்கின்றன. இதில் 14 குடில்கள் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளன.
ஆயுர்வேத, கொரியன் சிகிச்சைக்காக இரண்டு குடில்கள், ஸ்டோர் ரூமிற்கு ஒரு குடில், வரவேற்பு அறைக்கு ஒரு குடில், யோகா, தியானத்திற்காக ஒரு அரங்கம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மூங்கில் குடிலிலும் டி.வி., ஏ.சி.வசதி, இரண்டு படுக்கை, டிரசிங் டேபிள், மேற்கத்திய கழிப்பறை, 24 மணி நேரமும் வெந்நீர், குளிர்ந்த நீர் உள்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
மாமல்லபுரத்தில் கான்கிரீட் குடில்களில் தங்கியிருந்து கடற்கரை அழகை கண்டுகளித்து, கடல்காற்றின் சுகமான தழுவலை உணர்ந்து வரும் சுற்றுலா பயணிகள், இனிமேல் குழல் மூங்கில் வீடுகளில் தங்கியிருந்து புதிய அனுபவத்தைப் பெறுவார்கள்.
மாமல்லபுரத்தில் உள்ள நவீன வசதிகள் குறித்து சுற்றுலாத்துறை செயலர் வெ.இறையன்பு கூறுகையில், உடலையும், மனதையும் புதுப்பித்து புத்துணர்வு பெறுவதற்கு மாமல்லபுரம் சிறந்த இடமாகும். இங்கு நீச்சல்குளம், யோகா, தியானம், ஆயுர்வேத சிகிச்சை, சைனீஸ் உணவகம், தென்னிந்திய உணவகம், தீமூட்டி குளிர் காய்தல், உற்சாகமாக சைக்கிளில் செல்லுதல் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. விடுமுறைகளைக் கொண்டாடுவதற்கு மாமல்லபுரம் மிகவும் சிறந்த இடமாகும்.
தமிழ்நாட்டில் பிரபலம் ஆகாத சுற்றுலா தலங்கள் 18 உள்ளன. இவை அனைத்தும் படிப்படியாக மேம்படுத்தப்படும். ஏலகிரியை ரூ.10 கோடி செலவில் அழகுபடுத்தி உள்ளோம். படகு குழாம், மேலும் இரண்டு பூங்காக்கள், மின்னொளி, சாலைகள், நடைப்பயிற்சி பாதை, கூடுதல் உணவகங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.
தாரமங்கலம் ரூ.50 லட்சம் செலவிலும், பழவேற்காடு ஏரி ரூ.2 கோடியிலும், கொல்லிமலை ரூ.5 கோடியிலும் மேம்படுத்தப்பட உள்ளது. இதுபோல மற்ற சுற்றுலா தலங்களும் படிப்படியாக மேம்படுத்தப்படும். மக்கள் நிம்மதியாக ஓய்வெடுத்து, மகிழ்ச்சியுடன் பொழுது போக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் எல்லா சுற்றுலா தலங்களிலும் ஏற்படுத்தி தரப்படும் என்று தெரிவித்தார்.