கோயிலின் வெளிப்பிரகாரத்தில் யானை ஒன்று மதம் பிடித்து ஒடுவது போலுள்ள சிற்பமும், ஆடல் கலையின் சூட்சமங்களை ஒரே நடன மாதுவிற்கு ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு கால்களை செதுக்கி தத்ரூபமாக விளக்கியிருப்பதும், ஒரே கல்லில் எதிரும் புதிருமாக யானையையும், காளையையும் படைத்திருப்பதும் ஈடிணையற்ற சிற்ப வேலைப்பாடுகள்.நூற்றுக்கால் மண்டபத்திலுள்ள அன்னபூரணி, வெளிப்பிரகாரத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர் திருவுருவச் சிலைகளில் ததும்பும் அழகு வார்த்தை வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டவை.
சோழப் பேரரசர் இராஜ ராஜ சோழர் கட்டிய தஞ்சை பெரிய கோயில், அவருடைய மகன் பேரரசர் இராசேந்திர சோழர் கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டியுள்ள (தஞ்சை பெரிய கோயிலையொத்த) பிரகதீஸ்வரர் கோயில் ஆகியவற்றுடன், இரண்டாம் இராஜ ராஜன் கட்டிய இந்த தாராசுரம் கோயிலும் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டதாகும்.
இதனை இந்திய தொல்லியல் துறை மிக அற்புதமாக பராமரித்து வருகிறது.
எப்படிச் செல்வது :
சென்னையிலிருந்து தஞ்சை அல்லது கும்பகோணத்திற்கு இரயில் மூலமாகச் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக இக்கோயிலிற்குச் செல்லாம்.
கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ. தூரத்திலும், தஞ்சையிலிருந்து 40 கி.மீ. தூரத்திலும் உள்ளது. அரசு பேருந்துகளும், மற்ற வாகன வசதிகளும் ஏராளமாக உள்ளது.
இக்கோயிலிற்கு அருகில் புகழ்பெற்ற பட்டீஸ்வரம், சுவாமி மலை (முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று), கும்பாபேஸ்வர்ர் திருக்கோயில்கள் உள்ளன. கும்பகோணத்தில் தங்கியிருந்து அனைத்துக் கோயில்களையும் காணலாம்.