தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. அவர் இசையமைத்த பல பாடல்கள் இன்றளவும் இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபகாலமாக அவரிடம் இருந்து நல்ல பாடல்கள் அதிகமாக வரவில்லை.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அவர் விஜய்யின் கோட் படத்துக்கு இசையமைத்தார். அந்த பட பாடல்கள் கூட எதிர்மறை விமர்சனங்களை அதிகமாகப் பெற்றன. இதனால் அவர் மீண்டும் தன்னுடைய பழைய ஃபார்முக்கு திரும்பவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கோவையில் நடக்கவுள்ள தன்னுடைய கச்சேரியை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “ஏ ஐ தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் திரைப்படங்களுக்கே இசையமைப்பாளர்கள் தேவையாக இருக்க மாட்டார்கள். யாருக்கெல்லாம் ஏ ஐ தொழில் நுட்பத்தைக் கையாள முடிகிறதோ, அவர்கள் சம்பாதிப்பார்கள். அதே போல இசையால் மனிதர்கள் கொடுக்கும் உணர்வை ஏ ஐ தொழில்நுட்பத்தால் கொடுக்க முடியாது என ஏ ஆர் ரஹ்மான் சொன்னதையும் நான் ஒப்புக் கொள்கிறேன்” எனப் பேசியுள்ளார்.