பிரபல தமிழ் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டு கைவிடப்பட்ட யோகன் படத்தை மீண்டும் தொடங்க அவர் முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். 2010களில் ஒரு ட்ரெண்ட் செட்டராக விளங்கிய கௌதம் மேனன் சூர்யா, கமல்ஹாசன், அஜித்குமார் என பல ஸ்டார் நடிகர்களை வைத்து படம் இயக்கினார். அப்போது விஜய்க்காக கௌதம் மேனன் தயார் செய்து வைத்திருந்த படம்தான் யோகன் அத்தியாயம் ஒன்று. இந்த படத்திற்கான அறிவிப்பு போஸ்டர் வரை வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, பின்னர் பல காரணங்களால் படம் ஷூட்டிங்கே தொடங்காமல் முடிந்து போனது.
ஆனாலும் இன்று வரை அந்த படம் குறித்த பேச்சுகள் சினிமா வட்டாரத்தில் எழாமல் இல்லை. இந்நிலையில்தான் இந்த படத்தை மீண்டும் உருவாக்க திட்டமிட்டுள்ளாராம் கௌதம் மேனன். தற்போது விஜய் சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்ட நிலையில், தளபதிக்கு பதிலாக புரட்சி தளபதி விஷாலை நாயகனாக வைத்து படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறாராம் கௌதம் மேனன். இதற்கான முயற்சிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K