Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவசங்கர் பாபாவை ஆஹோ ஓஹோவென புகழ்ந்திருக்கும் எழுத்தாளர் சுஜாதா!

சிவசங்கர் பாபாவை ஆஹோ ஓஹோவென புகழ்ந்திருக்கும் எழுத்தாளர் சுஜாதா!
, திங்கள், 21 ஜூன் 2021 (12:40 IST)
சமீபத்தில் கைது செய்யப்பட்ட போலி சாமியார் சிவசங்கர் பாபாவைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய புத்தகத்தில் எழுதி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

தமிழ் வணிக  எழுத்தின சூப்பர் ஸ்டார் என்றால் அது சுஜாதா. அவரைப் பற்றி புகழ்ந்து பேசும்போது சூரியனுக்குக் கீழிருக்கும் அனைத்தைப் பற்றியும் எழுதியவர் எனக் கூறுவதுண்டு. அப்படிபட்ட சுஜாதா சமீபத்தில் பாலியல் சர்ச்சைகளில் சிக்கி கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவைப் பற்றி தன்னுடைய கற்றதும் பெற்றதும் என்ற புத்தகத்தில் புகழ்ந்து எழுதியுள்ளார்.

அதில் ‘‘வீடுமின் முற்றவும்’ என்று சொன்ன நம்மாழ்வாரைக் காட்டிலும் சுருக்கமாக, ’விடு, வீடு’ என்று உபதேசித்து, சுவிஸ் சாக்லேட் தந்து என்னை ஆசீர்வதித்த சிவசங்கர் பாபாவை ஒரு ஹைடெக் யோகி என்பேன். ஐ.எஸ்.டி.என். கனெக்ஷன் மூலம் உலகோடு பேசுகிறார்; உறுத்தாமல் உபதேசிக்கிறார்.

கேளம்பாக்கத்தை அடுத்த அவரது ‘சம்ரட்சணா’ வசதிகள் 35 ஏக்கரில் பரவியுள்ளன. ஆஸ்பத்திரி அஞ்சு நட்சத்திர ஓட்டல் போல் இருக்கிறது. கட்டணம் ஒரு நட்சத்திரம் கூட இல்லை; இலவசமாம். வயசானவர்களுக்கு நிம்மதி தர, ஆரோக்கியமான சூழ்நிலையில் வீடுகள் கட்டிக் கொடுத்து, ‘கம்யூனிட்டி லிவிங்’ என்று அவரவருக்கு டியூட்டி போட்டுக் கொடுத்திருக்கிறார்.

‘சுஷீல்ஹரி’ சர்வதேசத் தரம் வாய்ந்த பள்ளியில் கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தைகள் ப்ளஸ் டூ வரை படிக்கிறார்கள். ஆசிரியர்கள் எல்லோரும் தன்னார்வலர்கள். கிராம மேம்பாட்டுக்கான சேவைகள், இலவச கல்யாணம், கராத்தே, ஜிம், விளையாட்டு மைதானங்கள், வேலைவாய்ப்பு, திறந்த கோயில்கள், மசூதி, சர்ச், ஜெயின் கோயில், புத்த விஹாரம்… இத்தனையையும் ஒருவர் தீர்மானித்து ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றியது வியக்க வைக்கிறது.

எல்லாம் உடலுழைப்பு; மன வைராக்கியம். இதனை இதனால் இவன் முடிக்கும் என்று அவரவருக்கு அவரவர் பணிகளைப் பிரித்துக் கொடுத்து, பசுமையும் மரங்களும் மலர்களும் சூழ்ந்த ஆரோக்கியமான தனி நகரம் அமைத்திருக்கிறார். அக்கடா என்று போய் இருந்துவிடலாமா என்று தோன்றியது.

ஆனால், அவ்வளவு சுகஜீவனமிருந்தால் எனக்கு எழுத வராது. என்னை வீட்டுக்கு எடுத்துச் செல்ல விரும்பும் மயிலாப்பூர் கொசுக்களும், நிசாசரர்களான தண்ணி லாரிகளின் நியூட்ரல் உறுமல்களும், அக்கம்பக்கத்தில் குழந்தைகளின் கீச்சுக்குரல் அலறல்களும், அண்டை வீட்டில் இதற்கு மேல் சத்தமாக வைக்க முடியாத டி.வி-யும், எங்கள் ‘கிவி’யின் அவ்வப்போதைய ‘வள்’ளலும் எழுதத் துணையாக வேண்டும். ஒவ்வொரு நூற்றாண்டிலும் சிலர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களைக் கருவியாக வைத்து அமைப்புகள் தோன்றுகின்றன; விஸ்தாரம் அடைகின்றன; பரவுகின்றன. மேல்மருவத்தூர், கீழ்மின்னல், அமிர்தானந்தமயி, புட்டபர்த்தி என ஒருவரைக் குவி மையமாக வைத்து, அவர் பேர் சொல்லி அற்புதச் செயல்களும், தர்ம காரியங்களும் நிகழ்கின்றன. இறைவன் ஏதோ ஒரு காரியத்துக்காக பிரத்யட்சமாகத் தோன்ற விரும்பாத இந்த யுகத்தில், இவர்கள்தான் பிரதிநிதிகள். சிவசங்கர் பாபா என்னிடம் ஒரு யாக நெருப்பின் போட்டோவைக் காட்டி, ‘ருத்ர தாண்டவம் போலத் தோன்றுகிறது, பாருங்கள்’ என்றார். என் வைணவக் கண்களுக்குப் புல்லாங்குழல் கிருஷ்ணன் போல இருந்தது. அசப்பில் இயேசுவும் தெரிந்தார். ‘அவரவரிறையவர் குறைவிலர்’. என புகழ்ந்து எழுதியுள்ளார். இந்த பதிவு இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிகில் நடிகையின் குளியல் புகைப்படம்: சிங்கப்பெண்ணிடம் சீறிப்பாயும் நெட்டிசன்ஸ்!