நடிகர் சங்கப் பிரச்சனை தொடர்பாக ராதாரவி தொடர்ந்த வழக்கில், நாளை நேரில் ஆஜராவாரா விஷால் என்ற கேள்வி எழுந்துள்ளது.
2015ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தேர்தலில் ஜெயித்து பதவிக்கு வந்ததும், பழைய நிர்வாகிகள் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்தனர் விஷால் அணியினர். இதை எதிர்த்து முன்னாள் செயலாளரான ராதாரவி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், முன்னாள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத்தடை விதித்தனர்.
ஆனால், கோர்ட் உத்தரவை மீறி ராதாரவி உள்ளிட்ட சிலரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினார் விஷால். இது நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி வழக்கு தொடர்ந்தார் ராதாரவி. இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், நேற்று முன்தினம் (டிசம்பர் 19) விஷால் ஆஜராகவில்லை.
விஷாலுக்கு காய்ச்சலாக இருப்பதால், 21ஆம் தேதி வரை ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக விஷாலின் வழக்கறிஞர் தெரிவித்தார். அதனை ஏற்று விசாரணை ஒத்திவைத்த நீதிமன்றம், நாளை விஷால் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.