Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துணைத்தலைவர் பதவியை ஏற்று கொண்டது ஏன்? பார்த்திபன் விளக்கம்

துணைத்தலைவர் பதவியை ஏற்று கொண்டது ஏன்? பார்த்திபன் விளக்கம்
, புதன், 26 டிசம்பர் 2018 (08:28 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பூட்டு போட்ட விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய சமீபத்தில் விஷால் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய துணை தலைவராக பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன் துணை தலைவராக இருந்த கவுதம் மேனன் பதவி விலகியதை அடுத்து பார்த்திபன் புதிய துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி போன்ற அரசியல் நமக்குள் வேண்டாம் என்றும், துணை தலைவராக தேர்ந்தெடுத்த போது, முதலில் மறுத்து, பின் சூழ்நிலை மதித்து சம்மதித்ததாகவும் பார்த்திபன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தனது அறிக்கையில் கூறியிருந்ததாவது:

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க அங்கத்தினர்கள் அனைவருக்கும்...

நான் தயாரிப்பாளர் ஆனது என் படைப்பின் சுதந்திரத்திற்கே! உறுப்பினரானது கடமை. செயற்குழு உறுப்பினரானது இருந்ததை காட்டிலும் சிறந்ததை செய்ய நம் உழைப்பையும் நேரத்தையும் கூடுதலாக தரலாம் என்ற தர்ம சிந்தனையின்றி லாப நோக்கமல்ல. இச்சங்கத்தில் இதுவரை நான் கண்டதெல்லாம், சிறிய பலனுக்கு கூட சீரிய முயற்சி எடுக்கப்பட்டதென்னவோ உண்மை. காணாதது, ஊழல் மற்றும் உபத்தொழிலாய் பதவிகளை பயன்படுத்தி யாரும் லஞ்ச லாபம் அடைவது. அதை நான் என்றாவது அறிந்திருந்தால் அன்றே பதவி விலகிருப்பேன். நேர்முக மறைமுக கலெக்‌ஷன் என்று ஒன்று இருந்தால் மட்டுமே எலெக்‌ஷன் சூடு பிடிக்குமோ என்னவோ?

அதிரடி அறிக்கைகளும், ஆர்ப்பாட்டங்களும் காண்கையில் பொதுமக்களுக்கும் அதுவே தோன்றுகிறது. நியாயம் கேட்க நீதிமன்றத்தில் பல வாசல்கள் உண்டு. முடிவாய் உரிமையை நன்முறையில் நிலைநாட்ட தேர்தல் என்ற ஒன்று மிக அருகில் இருக்கையில் பூட்டு போட்டு வன்முறையில் ஈடுபடுவது அநாகரீகமானது என்பதை நான் மட்டுமல்ல, நீதிமன்றமும் வன்மையாக கண்டித்துள்ளது.

சகலரிடமும் சுமூகமாக நேசக்கரம் நீட்டுபவன் நான். வன்முறையில் துளியும் நம்பிக்கை இல்லாதவன். சங்க பதவி மூலம் அந்த நட்பில் சிறு பிளவு ஏற்படுவதையும் விரும்பாதவன். எனவே ஆளுங்கட்சி, எதிர்கட்சி போன்ற அரசியல் நமக்குள் இருந்தால், அதை களைந்து ஒற்றுமை மேம்பட முயற்சிப்போம். நேற்று திடீரென தலைமையும், செயற்குழு உறுப்பினர்களும் என்னை துணை தலைவராக தேர்ந்தெடுத்த போது, முதலில் மறுத்து, பின் சூழ்நிலை மதித்து சம்மதித்தேன். (தேர்தலின் போதே விஷால் என்னை உயர் பொறுப்புகளுக்கு நிற்க சொல்லியும் மறுத்தவன் நான்)

webdunia
இந்த அமைப்பின் பதவிக்காலம் முடியும் வரை, என்னால் இயன்ற ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று முடிவெடுத்தே EC உறுப்பினராக ஆனேன். இந்த பதவியில் எந்த சுகமும் இல்லை, பணிச்சுமை மட்டுமே. மிச்சமுள்ள குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் உச்சமான ஒரு இசைக்கலைஞனுக்கு உரிய மரியாதையை கெளரவமாக செய்து, அந்நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவிடும் வகையில் செய்யும், ஒரே ஒரு பொறுப்பை மட்டுமாவது பொறுப்பாய் செய்திட இடையூன்றி அனைவரும் இணைந்திட வேண்டுகிறேன்.

இவ்வாறு பார்த்திபன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வசனகர்த்தாவாக மாறிய யோகிபாபு