தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அவரது சமீபத்தையப் படங்களில் பிச்சைக்காரன் 2 தவிர வேறு எதுவும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் விஜய் ஆண்டனி தற்போது மீண்டும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடிப்பில் அருவி பட இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகும் சக்தி திருமகன் திரைப்படம் நாளை ரிலீஸாகிறது. இது விஜய் ஆண்டனியின் 25 ஆவது படமாகும்.
இந்த படத்துக்கு முதலில் பராசக்தி என்ற டைட்டிலைப் பெற விஜய் ஆண்டனி முயற்சி செய்தார். ஆனால் அதை சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்காக டான் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த டைட்டில் சர்ச்சை குறித்து பேசியுள்ள விஜய் ஆண்டனி “பராசக்தி என்பது மிகவும் பெருமைமிக்க டைட்டில். அதை ஏவிஎம் நிறுவனத்திடம் வாங்க முயன்றேன். ஆனால் என் படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தததால் அதைப் பெற முடியவில்லை. சக்தி திருமகன் படத்தைப் போட்டுக்காட்டி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால் அதற்குள் ஒரு பெரிய நிறுவனம் அதை வாங்கிவிட்டார்கள். அவர்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை” எனப் பேசியுள்ளார்.