தளபதி விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான சச்சின் திரைப்படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த படத்தை மீண்டும் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் தாணு தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
2005 ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான சச்சின் திரைப்படம், ரூ.6 கோடி செலவில் உருவாகி, ரூ.24 கோடி வரை வசூல் செய்து பெரும் வெற்றி பெற்றது.
விஜய், ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலு, சந்தானம், ரகுவரன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படத்தை, பிரபல இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியிருந்தார். இப்படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து, நினைவில் நிலைக்கும் பாடல்களை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், சச்சின் படம் திரையரங்குகளில் திரும்ப வெளியாகும் தகவல் விஜய் ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு படம் திரைக்கு வர இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே விஜய் நடித்த கில்லி திரைப்படம் திரும்ப வெளியிடப்பட்டு, வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. அதேபோல் சச்சின் திரைப்படமும் அதே வெற்றியைத் தொடர்ந்து சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.