கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இதையடுத்து விடுதலை இரண்டாம் பாகம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகி பாராட்டுகளையும் நல்ல வசூலையும் பெற்றுள்ளது.
படம் வெளியான நாள் முதல் சீரான வசூலைப் பெற்று வருகிறது. ஆனாலும் படத்தில் பிரச்சாரத் தொனி மிகவும் அதிகமாகவுள்ளதாகவும் ஒரு விமர்சனம் எழுந்தது. அதனால் பெரியளவில் வசூல் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வரக்கூடும் எனவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்போது அதே நிறுவனத்துக்காக வெற்றிமாறன் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க உள்ளதாகவும் RS இன்போடெயின்மெண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து பணியாற்றிய பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை முடித்த பின்னர் இந்த படம் தொடங்கலாம் என சொல்லப்படுகிறது.