Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த விருது என் எதிர்காலப் பொறுப்பையே அதிகமாக்குகிறது- கவிஞர் வைரமுத்து

Advertiesment
இந்த விருது என் எதிர்காலப் பொறுப்பையே அதிகமாக்குகிறது- கவிஞர் வைரமுத்து
, வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (15:25 IST)
தர்மதுரை படத்திற்காக கவிஞர் வைரமுத்து தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவர் பெறும் ஏழாவது தேசிய விருது ஆகும். இந்த நிலையில் இது குறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் என்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய விருதை ஏழாவது முறையாகப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இதில் நானடையும் மகிழ்ச்சியைவிட நாடு அடையும் மகிழ்ச்சியே பெரிதென்று கருதுகிறேன்.

அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது  என்பதில் என் சமகாலச் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது. பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல; நான் ஒரு கருவி மட்டுமே.

தர்மதுரை படத்தின் இயக்குநர் சீனுராமசாமி, இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சுகுமார், நடித்த விஜய்சேதுபதி - தமன்னா, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், குரல் கொடுத்த பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்வதில் நாகரிகம் அடைகிறேன்.

இந்தப் பாடல் தற்கொலைக்கு முயன்றவனைத் தாங்கிப் பிடிக்கும் பாடலாகும்.

தற்கொலை என்பது தேசத்தின் நோயாகப் பெருகிவருகிறது. காதல் தோல்வி - மன அழுத்தம்- அச்சம்- வறுமை என்ற காரணங்களே மனிதர்களைத் தற்கொலைக்கு தள்ளுகின்றன. எந்த ஒரு தோல்வியிலும் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. தோல்வி என்பது அடுத்த வாசலுக்கான கதவு என்று உணர்த்தவேண்டும். அதைத்தான் இந்தப்பாடலை பாடும் நாயகி நாயகனுக்கு நினைவுறுத்துகிறாள்


“எந்தப்பக்கம் காணும் போதும்
வானம் ஒன்று – நீ
எந்தப் பாதை ஏகும் போதும்
ஊர்கள் உண்டு

ஒரு காதல் தோல்வி காணும் போதும்
காதல் உண்டு – சிறு
கரப்பான் பூச்சி தலைபோனாலும்
வாழ்வதுண்டு

●    

உன் சுவாசப் பையை மாற்று – அதில்
சுத்தக் காற்றை ஏற்று – நீ
இன்னோர் உயிரில் இன்னோர் பெயரில்
வாழ்ந்துவிடு”

- என்று பாடுகிறாள்.

பொழுதுபோக்கு மட்டுமே நோக்கமல்ல. தன்முனைப்பும் தன்னெழுச்சியும் தன்னம்பிக்கையும் ஊட்டுவதே கலையின் நோக்கம். இதைச் சொல்லும் படங்களும் பாடல்களும் களிப்பூட்டுவதோடு மக்களுக்குக் கற்பிக்கவும் செய்கின்றன நல்ல சிந்தனைக்கும் மொழிவளத்துக்கும் இடமளிக்கிற பாடல்கள் எல்லாப் படங்களிலும் இடம் பெறுவது நிகழ்காலக் கலையின் கடமையாகிறது.

இந்த விருது என் எதிர்காலப் பொறுப்பையே அதிகமாக்குகிறது. புதிய பொறுப்போடும் விருப்போடும் என் பயணத்தைத் தொடரத் தமிழ்மக்களின் வாழ்த்துக்களையே வரமாய்க் கேட்கிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசிய திரைப்பட விருதுகள்: தமிழ் திரையுலகினருக்கு கிடைத்த கவுரவம்!!