மிஸ்டர் நெதன்யாகு கழற்றிவைத்த இதயத்தை எடுத்து அணிந்துகொள்ளுங்கள்.. காஸா போர் குறித்து வைரமுத்து..!

Siva
ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (12:06 IST)
காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், திமுக உள்பட பல கட்சிகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கவிதை வடிவில் கூறியிருப்பதாவது: 
 
இஸ்ரேல் எங்கிருக்கிறது?
தெரிய வேண்டியதில்லை
அது இருக்கிறது
என்று தெரிந்தால் போதும்;
ஓர் இனத்தை அழிக்கிறது
என்று தெரிந்தால் போதும்
 
உலகப்படத்தில்
பாலஸ்தீனம் எங்கிருக்கிறது?
தெரியவேண்டியதில்லை
அது இருந்தும்
இல்லாமல் இருக்கிறது என்று
தெரிந்தால் போதும்
 
65ஆயிரம் மனிதர்களின்
உடல் உடைக்கப்பட்டு
உயிர் உருவப்பட்டிருகிறது
 
செய்துமுடிக்கப்பட்ட
ஒரு செயற்கைப் பஞ்சத்தால்
நர மாமிசம் உண்ணக்கூடப்
பல உடல்களில் சதைகள் இல்லை
 
முளைக்குச்சியில்
குத்திவைக்கப்பட்ட
மண்டை ஓடுகளாய்க் 
குழந்தைகள்... குழந்தைகள்...
 
மனிதாபிமானமுள்ள யாருக்கும்
மனம் பதறவே செய்யும்
 
பாலைவனத்து மணலை அள்ளி
வாயில்போட்டு மெல்லும்
ஒரு சிறுவனைப் பார்த்து
நாற்காலிவிட்டு 
நகர்ந்து எழுந்தேன்;
தாங்க முடியவில்லை
 
இந்த இனத் துயரம்
முடிய வேண்டும்
 
நாளை 
நிகழ்வதாக அறியப்படும்
ஐ.நாவின் எண்பதாம் அமர்வில்
இந்த நிர்மூலம்
நிறுத்தப்பட வேண்டும்;
உலக நாடுகள்
ஒத்துழைக்க வேண்டும்;
அமெரிக்கா
வீட்டோ அதிகாரத்துக்கு
விடுமுறை விடவேண்டும்
 
மிஸ்டர் நெதன்யாகு
கழற்றிவைத்த இதயத்தை எடுத்து
இருந்த இடத்தில்
அணிந்துகொள்ளுங்கள்
 
இது
இந்தியாவின் தெற்கிலிருந்து
ஈரல் நடுங்கும்
ஒரு மனிதனின்
ஈரக் குரல்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஸ்டர் நெதன்யாகு கழற்றிவைத்த இதயத்தை எடுத்து அணிந்துகொள்ளுங்கள்.. காஸா போர் குறித்து வைரமுத்து..!

ரூ.215 கோடி பணமோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

வித்தியாசமான உடையில் கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

வெண்ணிற உடையில் அள்ளும் அழகில் அசத்தும் திஷா பதானி!

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... கவினின் ‘கிஸ்’ படம் திணறல்!

அடுத்த கட்டுரையில்
Show comments