புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை வேண்டாம் என்று சொன்னது வடிவேலுவின் முடிவுதான் என்று சொல்லப்படுகிறது.
நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. இந்நிலையில் தனது வெற்றிப்படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். இதனால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டது.
இந்நிலையில் இப்போது முன்னணி தயாரிப்பாளர்கள் சிலர் சேர்ந்து அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துகின்றனராம். வடிவேலுவும் ஒரு குறிப்பிட்ட தொகையை நஷ்டத்துக்காக கொடுப்பதாக ஏற்றுக்கொண்டாராம். ஆனால் இயக்குனர் ஷங்கர் மற்றும் லைகாவுக்கு இடையில் இருக்கும் இந்தியன் 2 படத்தின் பிரச்சனை முடிந்ததும் இந்த பிரச்சனையை முடித்துக் கொள்ளலாம் என லைகா சொல்லியுள்ளதாம்.
ஆனால் இருதரப்புக்கும் சமாதானம் ஏற்பட்டாலும், அந்த படத்தை தொடங்கவேண்டாம் என வடிவேலு கூறிவிட்டாராம். ஏனென்றால் இடைப்பட்ட காலத்தில் வடிவேலு தரப்புக்கும் ஷங்கர் தரப்புக்கும் இடையிலான உறவில் மிகப்பெரிய அளவில் விரிசல் விழுந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் மீண்டும் படத்தைத் தொடங்கினால் அது சரியாக வராது என வடிவேலு உறுதியாக தனது முடிவை தெரிவித்துள்ளாராம்.