Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலித் மக்களுக்கு எதிரான தீண்டாமை: காவல்துறை நேர்மையோடு செயல்பட வேண்டும் - திருமாவளவன்!

தலித் மக்களுக்கு எதிரான தீண்டாமை: காவல்துறை நேர்மையோடு செயல்பட வேண்டும் - திருமாவளவன்!
, செவ்வாய், 13 ஜூன் 2023 (15:07 IST)
தலித் மக்களுக்கு எதிரான சாதிய தீண்டாமை சம்பவங்களில் காவல்துறை நேர்மையோடு செயல்பட வேண்டும் எனவும், மதவெறி, சாதிவெறியை தூண்டி அரசியல் லாபம் பார்க்கும் பாஜக, பாமகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என்றும் திருமாவளவன் பேசியுள்ளார்.
 
சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்து வாக்கு வங்கியை வலுப்படுத்தலாமென்ற பாஜகவின் அரசியலை பாமக கையில் எடுத்திருப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு.
 
மதுரை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற சாதிய தீண்டாமை வன்முறை சம்பவங்களை கண்டித்து விசிக சார்பில் கோ.புதூர் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், எவிடென்ஸ் கதிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 
கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில்,
 
"மதுரை திருமோகூர் கலவர சம்பவத்தில் அகமுடையார் சமூகத்தை சேர்ந்த அத்தனை பேரும் தலித் சமூகத்துக்கு எதிரானவர்கள் அல்ல. தற்போது கிராமங்களில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. அது தான் திருமோகூர் கலவரத்துக்கும் ஒரு காரணம். ஒரு சாதியின் குறிப்பிட்ட குழுவை சார்ந்தவர்கள் தான் இதில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுதான் நடக்கிறது.
 
இதுபோன்ற நேரத்தில் காவல்துறை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நமது ஆதங்கம். உயரதிகாரிகள் நேர்மையாக இருக்க விரும்பினாலும் கீழே பணியாற்றும் சிலர் ஒரு சார்புடன் இருப்பதை பார்க்க முடிகிறது. இதுவரை சட்டப்பூர்வமான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது. அதனால் தான் ஆர்ப்பாட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது அரசியல் உள் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது கூட்டம் அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று அவர்களுக்கு நம்பிக்கை தரவேண்டும் என்பது தான் ஜனநாயக சக்திகள் செய்யும். அதை தான் விசிக செய்துள்ளது. 
 
திமுக கூட்டணியில் பிளவு ஏற்படாதா என பலர் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை ஆர்பாட்டம் நடத்தினாலும் திமுக அரசை பாதுகாக்கும் போர்வாள்களாக இருப்போம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பது வேறு. கொள்கை சார்ந்த எதிரிகளை வீழ்த்த அணி சேர்வது என்பது வேறு.
 
மதுரையில் திருமோகூர், காயாம்பட்டி, இளமனூர், மையிட்டான்பட்டி, கள்ளந்திரி, கிடாரிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஓரிரு ஆண்டுகளில் கோவில் தொடர்பான பிரச்சனை, பாலியல் வன்கொடுமை, குடியிருப்பு தாக்குதல் போன்ற சாதிய வன்கொடுமை நடந்துள்ளது. காவல்துறையின் நடவடிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை. இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்கிறார்கள். இது நியாயம் அல்ல. வன்முறை வெறியாட்டங்களின் போது சாதி வெறியர்களுடன் போலீசும் சேர்ந்து கொள்ளும். இதுவரை பல ஒடுக்குமுறைகளை சந்தித்துள்ளோம். எப்போதும் முக்குலத்தோர், வன்னியர், கவுண்டர் சமூகங்களுக்கு எதிராக நாங்கள் வன்முறையை தூண்டியதாக ஒரு சான்று கிடையாது.
 
சாதிய பிற்போக்குவாதத்தின் தந்தை மருத்துவர் ராமதாஸ். அவருக்கு பின்னர் தான் தமிழகத்தில் சாதிய சங்கங்கள் எல்லாம் அரசியல் கட்சிகளாக மாறின. இதர பிற்படுத்தப்பட்ட மக்களை சாதியவாத காட்சிகள் சரியாக வழிநடத்துவதில்லை. பாமகவும், ஆர்.எஸ்.எஸ்.ம் செய்வது ஒரே வேலையை தான். இருவரும் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். எந்த காலத்திலும் பாஜகவுடனும், பாமகவுடனும் கூட்டணி இல்லை.
எங்கள் தேர்தல் அரசியல் சூனியமானாலும் அவர்களோடு கூட்டணி வைப்பதில்லை. மதவெறி சாதி வெறியை தூண்டி அரசியல் லாபம் சேகரிக்கும் சனாதன சக்திகள் தான் பாஜகவும் பாமகவும்.
இந்தியா முழுவதும் பாஜக எதிர்ப்பு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்.
 
சாதிய தீண்டாமை விவகாரங்களில் காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அரசுக்கு களங்கம் ஏற்பட கூடாது என்றால் காவல்துறை நேர்மையோடு செயல்பட வேண்டும் சென்னை வந்த அமித்ஷா பாஜக 25 இடத்தில் தமிழகத்தில் வெற்றி பெற வேண்டுமென வெறும் கையில் முழம் போடுகிறார் அது அமித்ஷாவின் பேராசையை காட்டுகிறது இதற்காக பாஜக எடுத்து வரும் சூது சூழ்ற்சியை நாம் பார்க்க வேண்டும் பொய், புரளியை வதந்தியை பரப்பி மத சாதிய பிரிவினையை தூண்டி வாக்கு வங்கியை வலுப்படுத்தலாம் என நினைப்பதுதான் பாஜகவின் யுக்தி அதே பாதையைத்தான் தற்போது பாமகவும் கையில் எடுத்து இருக்கிறது "என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு பிடிச்சிருக்கு... என்னை நல்லா பார்த்துப்பாரு - விஜய் வர்மா உடனான காதலை உறுதிப்படுத்திய தமன்னா!