தமிழ் சினிமாவில் நாயகிகளின் பிரகாச காலம் என்று பார்த்தால் 5 முதல் 10 ஆண்டுகள்தான். அதன் பிறகு அக்கா, அம்மா வேடத்தைக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர்தான் இதற்கு விதிவிலக்காக இருப்பார்கள். அப்படிப்பட்ட நடிகைதான் திரிஷா.
ஜோடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து இப்போதும் பரபரப்பான கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் பொன்னியின் செல்வன் வெற்றியால் மீண்டும் அவரைத் தேடி வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.
திரிஷாவுக்கு 40 வயதுக்கு மேல் ஆகியும் இன்னமும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் அடிக்கடி அவர் திருமணம் குறித்த வதந்திகள் பரவி வருகின்றன. சமீபத்தில் த்ரிஷா சண்டிகாரை சேர்ந்த ஒரு தொழிலதிபரை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக ஒரு தகவல் பரவியது. அது குறித்து த்ரிஷா இப்போது நக்கலாகப் பதிலளித்துள்ளார். அதில் “ என் வாழ்க்கையை மற்றவர்கள் திட்டமிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று. அவர்கள் என் தேனிலவையும் திட்டமிட்டு தருவதற்காக நான் காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.