புலிப்பார்வை பாடல்கள் வெளியீட்டு விழாவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
புலிப்பார்வை என்னும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றுள்ளது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், புலிப்பார்வை திரைப்படம் குறித்துச் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அப்படக் குழுவினரும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் மாணவர்களை இரும்புக் கம்பிகள், உருட்டுக் கட்டைகள் போன்ற ஆயுதங்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் செம்பியன், மாறன், பிரதீப், பிரபா உள்ளிட்ட சிலர் மிகக் கடுமையான காயங்களுக்குள்ளாகி உள்ளனர்.
பின்னர், தாக்குதலுக்குள்ளான மாணவர்களையே காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஈழத்தில் தமிழின விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புவது, அண்மைக் காலமாக தமிழகத் திரைப்படத் துறையில் அதிகமாகி வருகிறது. புலிப்பார்வை திரைப்படத்திலும் விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரிக்கும் அத்தகைய காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.
அப்படியிருந்தால், அத்தகைய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தைத் திரையிட வேண்டுமேயொழிய, அது பற்றிக் கேள்வி எழுப்புகிறவர்களை, எதிர்ப்புத் தெரிவிப்பவர்களைத் தாக்குவது தமிழினத்திற்கு எதிரான போக்காகும். இதனை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும், கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்."
- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.