மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு கூட்டம் குறையாததால் இந்த வாரம் வெளியாக இருந்த தமிழ்ப்படங்களில் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனின் கதையை தழுவிய இந்த படத்தை காண பலரும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) அன்று படம் வெளியான நிலையில் இந்த வார இறுதி வரை அனைத்து திரையரங்குகளிலும் பெரும்பாலான காட்சிகள் புக்கிங் ஆகியுள்ளது. டிக்கெட் கிடைக்காமல் பலரும் அடுத்தடுத்த வாரங்களின் முன்பதிவு தொடங்கும்போது வேகமாக புக்கிங் செய்து வருகின்றனர். ஆடியன்ஸின் ஏகோபித்த வரவேற்பால் படம் ரிலீஸான மூன்றே நாட்களில் 200 கோடி வசூல் செய்துள்ளது.
அடுத்த இரண்டு வாரங்கள் வரை பொன்னியின் செல்வனுக்கு தொடர்ந்து கூட்டம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரம் வெளியாக இருந்த படங்களை திரையரங்குகள் எடுக்க தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. பொன்னியின் செல்வன் வசூலுக்கு நடுவே சிறிய படங்கள் வந்து வசூல் இல்லாமல் போகக்கூடாது என்பதற்காக இந்த வாரம் ரிலீஸாக இருந்த படங்களை ஒத்திவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி நாளை ரிலீஸாக இருந்த பார்டர், 7ம் தேதி வெளியாக இருந்த காஃபி வித் காதல், சதுரங்க வேட்டை 2, காசேதான் கடவுளடா, ரீ மற்றும் தாதா ஆகிய படங்கள் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.