பெண்களின் குரலாக தன்னம்பிக்கை தரும் ‘தீரா தீராளே’ என்ற பாடலை எழுதியுள்ளார் முருகன் மந்திரம்.
கேரளா, கொச்சி நகரில் நடைபெற்ற ‘மோஜோ ரைஸிங்’ பிரமாண்ட இசை நிகழ்ச்சியில், உலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய ‘தீரா தீராளே’ பாடலை முதல் முறையாகப் பாடினார் பாடலின் இசை அமைப்பாளரும், பாடகியுமான அஞ்சு பிரம்மாஸ்மி. 16 பேண்ட்ஸ், இரண்டு நாட்கள் என பிரமாண்டமாக நடந்த இந்த இசை நிகழ்ச்சியில், பெண்களின் குரலாக தன்னம்பிக்கை பேசும் பாடலாக ‘தீரா தீராளே’ பாடலைப் பாடி பலத்த கைத்தட்டல்களையும், வரவேற்பையும் பெற்றார் அஞ்சு பிரம்மாஸ்மி.
சர்வதேச போர்ச்சுகீசிய இசை விருதுக்காக தேர்வான இந்தியப் பாடகி அஞ்சு பிரம்மாஸ்மி, தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், க்ரீக், ஸ்பானிஷ், ரஷ்யன் உள்ளிட்ட 10 மொழிகளில் பாடிக்கொண்டிருப்பவர். அஞ்சு பிரமாஸ்மி இசையமைத்து பாடும் ‘இன்விக்டஸ்’ ஆல்பத்திற்காக அவருடன் இணைந்துள்ளார் முருகன் மந்திரம். ‘இன்விக்டஸ்’ ஆல்பத்தில் இடம்பெறும் பாடல்களில் ஒன்று ‘தீரா தீராளே’.
இதுபற்றி முருகன் மந்திரம் கூறுகையில், “இந்த ஆல்பம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஆல்பம். அதிலும் அஞ்சு பிரம்மாஸ்மியுடன் பணியாற்றுவது அலாதி இன்பம். சர்வதேச இசையுடன் தொடர்பும் அனுபவமும் உள்ள அஞ்சு, மிக அன்பான தோழியும் கூட. ‘தீரா தீராளே’ பாடல், புரட்சிப் பாடகன் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முதல்முறையாக பாடப்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி” என்றார்.