அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ள அனிமல் திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் ஓடும் இந்த படம் 10 நாட்களில் 717 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வார இறுதியில் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி. அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நேற்று அனிமல் படத்தைப் பார்த்தேன். உண்மையாக எனக்கு கோபம்தான் வந்தது. இந்த படம் நாஜிக்களை பெருமைப் படுத்துவது போல உள்ளது. ஆல்ஃபா மேல் என்று கூறி ஆணாதிக்கத்தை நியாயப்படுத்துகிறது. திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட விஷமக் கருத்துகளை பரப்புகிறது.
மிருகத்தனமாக நடக்கும் கணவனிடம் அவனின் மனைவி அமைதியாக இருப்பது போல காட்டுவது அபத்தம். வசூலை வாரிக்குவிக்கும் இந்த படம் நமது சமூக நிலைமையை பிரதிபலிக்கிறதா?” என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.