ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸில் இருந்து ‘விவேகம்’ பின்வாங்கியிருப்பதால், அடுத்த வார ரிலீஸ் செய்ய ஏகப்பட்ட படங்கள் போட்டி போடுகின்றன.
அஜித் நடிப்பில் சிவா இயக்கியுள்ள படம் ‘விவேகம்’. ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்ததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என கூறப்பட்டது. ஆனால், நேற்றே சென்சார் செய்யப்பட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் தரப்பட்டுவிட்டது.
இருந்தாலும், ஆகஸ்ட் 24ஆம் தேதி தான் ‘விவேகம்’ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் என்பதால், 11ஆம் தேதி படங்களை ரிலீஸ் செய்தால், விடுமுறையையொட்டி குறைந்தது 5 நாட்களாவது கூட்டம் இருக்கும். எனவே, அடுத்த வார ரிலீஸுக்கு ஏகப்பட்ட படங்கள் போட்டிபோடுகின்றன.
ஜோதிகா நடித்த ‘மகளிர் மட்டும்’, 10ஆம் தேதியே ரிலீஸ் ஆகிறது. உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ராமின் ‘தரமணி’, சி.வி.குமார் இயக்குநராக அறிமுகமாகும் ‘மாயவன்’, ‘குரங்கு பொம்மை’, ‘தப்புதண்டா’ உள்ளிட்ட படங்கள் 11ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிபிராஜின் ‘சத்யா’, ராணா டகுபதியின் ‘நான் ஆணையிட்டால்’ படங்களும் இந்த லிஸ்ட்டில் இடம்பெறும் எனத் தெரிகிறது.