பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை டாப்ஸி “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த சபாஷ் மிது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவர் நடிப்பில் அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள தக் தக் என்ற திரைப்படம் ரிலீஸானது. இந்த படத்துக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என டாப்ஸி ஆதங்கப்பட்டுள்ளார்.
இந்த படம் பற்றிய நேர்காணலில் பேசிய டாப்ஸி “ இந்த சினிமா சிஸ்டம் மொத்தமும் ஹீரோக்களை சுற்றியே உள்ளது. ஓடிடிகளும் அதைதான் பின்பற்றுகின்றன. சிறிய பட்ஜெட் படங்களுக்கும் முறையான வாய்ப்பு வழங்கப்படவேண்டும். சிறிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் ஒன்று இரண்டு காட்சிகள் ஓடினால் அதை தோல்விப் படமென்று முத்திரை குத்திவிடுவார்கள். அப்புறம் மக்கள் எப்படி அதை ஓடிடியில் பார்ப்பார்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.