ஏப்ரல் 2ஆம் தேதி தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறவிருப்பதால் தேர்தல் தேதி நெருங்க நெருங்க போட்டியிடும் ஐந்து அணிகளும் காரசாரமாக மோதி வருகின்றனர். நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இன்னொரு தயாரிப்பாளரான டி.சிவா மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார். டி.சிவா மீது 13 புகார்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.சிவா, 'சினிமா தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் பலர் வீடு, நகையை விற்று நெருப்பை வயிற்றில் கட்டுக்கொண்டு படங்கள் தயாரித்து வருகின்றனர். ஆனால் எடுபிடி வேலை பார்த்த ஒருவர் திடீரென தயாரிப்பாளராகி கேள்வி கேட்கின்றார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை
இந்த மாதிரி நபர்களை எல்லாம் மேடையேற்றி பேச வைத்து வேடிக்கை பார்ப்பது அசிங்கமான விஷயம். தேர்தல் பிரச்சாரத்தில் நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள். தனி நபர் தாக்குதல் வேண்டாம். யாரைப்பற்றியும் அசிங்கமாக பேசாதீர்கள். வெற்றி பெற்றால் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை மட்டும் பேசுங்கள்.
பழைய பகையை மனதில் வைத்து பேசும் நேரம் தேர்தல் அல்ல. பொதுமேடையில் நாகரீகம் இல்லாமல் பேசும் இவர் போன்றவர் சங்கத்தில் ஒரு பொறுப்பு கிடைத்தால் என்ன செய்வார்? இதை நான் மக்களின் கருத்துக்கே விட்டுவிடுகிறேன்
என் மீது 13 குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அது என்ன குற்றச்சாட்டு என்று சொல்லவில்லை. ஒரே ஒரு குற்றச்சாட்டு, அல்லது ஒரே ஒரு ரூபாய் ஊழல் செய்ததாக சொன்னால் நான் இப்பவே வெளியே சென்றுவிடுகிறேன்'
இவ்வாறு தயாரிப்பாளர் டி.சிவா பத்திரிகையாளர்களிடம் ஆவேசமாக கூறினார்.