நடிகர் கமல் தனது கருத்துகளையும், அரசியலை பற்றியும் ட்விட்டர் மூலம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். மேலும் கமல் அரசியல் கட்சி துவங்குவது உறுதியாகியுள்ளது. இதன் முன்னோட்டமாக கடந்த 7ஆம் தேதி புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.
சமீபத்தில் அமெரிக்காவில் புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழில் இருக்கை அமைக்க பல வருடங்களாக தமிழ் அறிஞர்கள் முயன்று வருகிறார்கள். அதற்காக அங்கு தமிழ் இருக்கை அமைப்பதற்காக ரூ. 20 லட்சம் நிதியை வழங்கினார் கமல்ஹாசன்.
இதையடுத்து தற்போது டில்லியில் நவம்பர் 20ஆம் நடைபெறவிருக்கும் 'கிஷான் முக்தி சன்சாத்' என்ற அகில இந்திய விவசாயிகள் மாநாட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இந்த மாநாடு நவம்பர் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 3 நாட்கள் டில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து பதாகை ஒன்றை கையில் ஏந்தியபடி கமல்ஹாசன் தனது டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்திய விவசாயிகளுக்கு கடன் படாதவர் யார்? அவர்கள் குரல் வலுப்பெறச் செய்யுங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு, தீர்வாக 5 லட்சம் நற்பணி இயக்கத்தாரை களமிறக்கி ஆறு, குளங்களை செப்பனிட உள்ளதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.