கடந்த மாதம் 24ஆம் தேதி துபாயில் திடீரென மரணம் அடைந்த இந்தியாவின் ஒரே லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் இழப்பை அவரது குடும்பத்தினர் ஈடுசெய்ய முடியாமல் சோகத்தில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களுக்கும் அவரது உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்ற முடியாத நிலையில் உள்ளனர். வரும் 7ஆம் தேதி தனது பிறந்த நாளை முதன்முதலில் அம்மா இல்லாமல் கொண்டாடப்போகும் ஜான்விகபூர், அம்மாவின் மறைவை நம்ப முடியாமல் உள்ளார். இந்த நிலையில் தனது தாய் குறித்து அவர் உருக்கமான ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை நீங்கள் படிக்கும்போது உங்கள் கண்களில் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியாது. இந்த உருக்கமான பதிவு இதோ:
அம்மா, மனம் முழுதும் அரித்துக் கொண்டிருக்கிறது நீயில்லாத வெறுமை. எனக்குத் தெரியும் இனி நீயற்ற வெளியில் நான் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இப்போதும் நான் உனது அன்பை உணர்ந்து கொண்டே தான் இருக்கிறேன். கவலைகளிலிருந்தும், வலிகளிலிருந்தும் என்னை மீட்டெடுக்க நீ எப்போதும் இருக்கிறாய் என உணர்கிறேன் நான். நான் கண்களை மூடிக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் எனக்குள்ளே சந்தோசமான நினைவுகளே ஊற்றெடுக்கின்றன அத்தனைக்கும் காரணம் நீ மட்டுமே! நீ எங்கள் வாழ்வில் கடவுள் எங்களுக்கு அளித்த ஆசிர்வாதம். நீ எங்களுடன் இருந்த காலம் முழுவதும் நாங்கல் கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்டவர்களாக உணர்ந்திருந்தோம். ஆனால் நீ இந்த உலகத்துக்குப் பொருத்தமானவள் இல்லை எனக் கடவுள் நினைத்து விட்டார் அம்மா, நீ மிகவும் நல்லவள், மிக, மிக பரிசுத்தமானவள், உனக்குள்ளே எப்போதும் நிரம்பியிருந்தது அன்பு மட்டுமே! அதனால் தான் கடவுள் உன்னை இத்தனை சீக்கிரம் தன்னிடமே திரும்ப அழைத்துக் கொண்டார். குறைந்த காலத்துக்காவது உன்னை அம்மாவென அடைந்திருந்தது எங்களது பாக்கியம்.
என் நண்பர்கள் சொல்வார்கள், நான் எப்போதும் பூரணமான சந்தோசத்துடன் இருக்கிறேன் என்று, இப்போது உணர்கிறேன் அது அனைத்தும் உன்னால் என, யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்தியதில்லை, எந்தப் பிரச்னையையுமே பெரிதாகக் கருதியதில்லை, எந்த நாளையுமே சோர்வாகவோ, வெறுமையாகவோ கடந்ததில்லை. ஏனென்றால் எங்களுடன் நீ இருந்தாய். நீ எங்களை மிக விரும்பி அன்பு செய்தாய். நான் எப்போதும் உன்னை மட்டுமே தேடிக் கொண்டிருந்ததால் எனக்கு நம்பிக்கைக்கும், பகிர்தலுக்குமாக வேறு யாருடைய தேவையுமிருந்ததில்லை. நீ என் ஆன்மாவின் ஒரு பகுதி. என் சிறந்த தோழி. எனது எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாவாக இருந்தவளும் நீயே. நீ உன் முழு வாழ்வையும் எங்களுக்கெனத் தந்தாய். ஒவ்வொருநாளும் காலையில் நான் விழுத்தெழும் போது என் மனதில் தோன்றும் ஒரே ஆசை என்னால் நீ பெருமையுற வேண்டும் என்பதாகவே இருக்கும். நானுனது மகள் எனும் பெருமை தரத்தக்க எனது இந்த ஆசை நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும். ஏனெனில் நீ என்றென்றைக்குமாய் என்னுடன் இருந்து எனது ஆசையை நிறைவேற்றித் தருவாய். நீ இல்லாத இந்த வெறுமையிலும் என்னால் உனது இருப்பை உணர முடிகிறதே. நீ என்னுள்ளும், தங்கை குஷியினுள்ளும், அப்பாவினுள்ளும் முடிவே இன்றி நீக்கமற நிறைந்திருக்கிறாய். எங்களிடத்தில் நீ பதித்துச் சென்ற தடங்கள் வலிமையானவை. அந்த வலிமை எங்களை இனி வழி நடத்தும். ஆனால் அந்த வலிமை முழுமையானதாக இல்லாத போதும் நீயற்ற வெறுமையக் கடக்கவும் எங்களுக்கு நீயே தான் துணையிருக்கிறாய்.
எங்களுக்கு எல்லாமுமாக இருந்த அம்மாவே, ஐ லவ் யூ!