Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறு பட்ஜெட் படங்களுக்கு குறைந்த டிக்கெட் கட்டணம்.. திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்..!

சிறு பட்ஜெட் படங்களுக்கு குறைந்த டிக்கெட் கட்டணம்.. திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்..!

Mahendran

, செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (11:41 IST)
பெரிய பட்ஜெட்டுகளில் உருவாகும் திரைப்படங்களுக்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கும் ஒரே கட்டணங்கள் திரையரங்களில் வசூலித்து வருவதால் திரையரங்குகளில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு கூட்டம் வருவதில்லை. இதனை அடுத்து இதுகுறித்து நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கடந்த நவம்பர் 2023 முதல், திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவது குறைந்து வருவது குறித்து தங்களின் குரல் பதிவை கேட்டோம். இந்த விஷயம் தயாரிப்பாளர்களையும் மிகவும் பாதித்து வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். 
 
குறிப்பாக சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை பெரும்பாலான பார்வையாளர்கள் திரையரங்குகளில் பார்த்து நல்ல வசூல் தரும் போக்கு குறைந்து வருவது அனைவருக்கும் கவலை தருகிறது. விதிவிலக்காக சில சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களுக்கு மட்டும் நல்ல வசூல் கிடைத்து வருகிறது. ஆனால் அவ்வாறு எப்போதாவது வரும் வெற்றி, நம் இரு தரப்பினருக்கும் போதாது.
 
சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவழைப்பது நம் இருவரின் பொறுப்பு. இதை மனதில் வைத்து நாம் இரு சங்கங்களும் சேர்ந்து சில மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியமாக உள்ளது.
 
நல்ல திரைப்படங்களை, சரியான விளம்பரங்களுடன் கொடுப்பது தயாரிப்பாளர்களின் பொறுப்பு என்றால், திரையரங்கில் அத்தகைய படங்களை பார்ப்பது அதிகம் செலவாகிற விஷயம் என்று மக்களிடம் உள்ள பொதுவான ஒரு எண்ணத்தை உடைப்பது திரையரங்கு உரிமையாளர்களின் பொறுப்பு.
 
சென்னையில் ரீ-ரிலீஸ் என்ற முறையில் சில முக்கிய படங்களை திரையரங்கில், குறைந்த டிக்கெட் கட்டணத்தில் வெளியிட்டு கமலா திரையரங்கம் நல்ல சாதனைகளை புரிந்துள்ளது. குறைந்த டிக்கெட் கட்டணங்கள் பார்வையாளர்களை கவருகின்றன என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
 
இதை முன்னதாரணமாக வைத்து சிறு பட்ஜெட் படங்களை பொதுமக்கள் திரையரங்கு வந்து பார்ப்பதை இலகுவாக்க, கீழ்கண்ட மாற்றி அமைக்கப்பட்ட டிக்கெட் கட்டணங்களை பிப்ரவரி 23 முதல் வெளியாகும் படங்களுக்கு தாங்கள் வசூலிக்க வேண்டும் என்று கோருகிறோம். இந்த ஒரு மாற்றம், மக்கள் மத்தியில், மீண்டும் திரையரங்கு வந்து சிறு பட்ஜெட் படங்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்ட வாய்ப்பு உள்ளது.
 
 சிறு பட்ஜெட் படங்கள் அதாவது ரூபாய் ஐந்து கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவை 150 திரையரங்களுக்கு மிகாமல் தமிழ்நாட்டில் வெளியாகும் படங்களுக்கு டிக்கெட் கட்டணம் ரூபாய் 50  மற்றும் ஜிஎஸ்டி வரி பெற்றுக்கொள்ளலாம்.
 
 அதேபோல் மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் ரூபாய் 5 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களுக்கு அனைத்து நகரங்களிலும் ரூபாய் 120 டிக்கெட் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரி பெற்றுக் கொள்ளலாம்.
 
மேற்கண்ட டிக்கெட் கட்டணங்களை விட அரசு அனுமதித்துள்ள டிக்கெட் கட்டணங்களை தான் வசூலிக்க வேண்டும், குறைத்து வசூலிக்க வேண்டாம் என்று எந்த தயாரிப்பாளராவது (சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளர் உட்பட) கடிதம் கொடுத்தால், அதை திரையரங்குகள் பின்பற்ற வேண்டும். அவ்வாறு கடிதம் எதுவும் தராத பட்சத்தில், இங்கே பரிந்துரைத்துள்ள குறைந்த டிக்கெட் கட்டணங்களை தான் அனைத்து தரப்பு படங்களுக்கும், திரையரங்குகள் வசூலிக்க வேண்டும்.
 
தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் இணைந்து டிக்கெட் கட்டணங்களை குறைத்து உள்ளார்கள் என்ற செய்தி ஊடங்களில் பரவும் போது, அது பொதுமக்களிடையே நல்ல ஒரு எண்ணத்தை உண்டாக்கும். அதன் மூலம், திரையரங்குகளுக்கு மக்கள் வரும் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மேற்கண்ட எங்களின் இந்த பரிந்துரையை ஏற்று ஒரு முடிவெடுத்து எங்களுக்கு தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறோம். 
 
வரவிருக்கும் பொது தேர்தல் காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பல சிறு பட்ஜெட் படங்கள் தான் வெளியாக வாய்ப்பு உள்ளது. மே மாதம் முதல் தான் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும், இந்த சூழ்நிலையில், நாம் டிக்கெட் கட்டணங்களை குறைத்துள்ளோம் என்ற நல்ல செய்தியை பொதுமக்களிடம் எடுத்து சொல்லி அவர்களை திரையரங்கு வந்து சிறு பட்ஜெட் படங்களை பார்க்க வைக்க வேண்டும். எங்களின் இந்த திட்டத்திற்கு தங்களின் முழு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம். நன்றி,
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் அடுத்த படத்தில் இருந்து விலகிய கார்த்திக் சுப்பராஜ்.. இதுதான் காரணமா?