”நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா” திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், சினிமா என்றால் தனக்கு என்னவென்றே தெரியாது என்று கூறியுள்ளார்.
கனா திரைப்படத்தை அடுத்து சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் “ நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா”. இந்த திரைப்படத்தில் ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோருடன் யூடியூப் பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் என்பவர் இயக்கியுள்ளார். கடந்த ஜூன் 14 ஆம் தேதி, இத்திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், நேற்று படக்குழுவினர் விழா ஒன்றை நடத்தினர். அந்த விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார்.
அப்போது அந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்கனவே இருந்ததாகவும், தான் மட்டும் வெற்றி பெறுவதை தாண்டி, திரைப்படத்தில் பங்கு பெறும் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என மனதில் வைத்து தான் தயாரிப்பைத் தொடங்கியதாகவும் கூறினார்.
மேலும் அவர் தனக்கு சினிமா என்றால் என்னவென்றே தெரியாது என்றும், தன் மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் தான் இந்த நிலைக்கு வந்திருக்கவே முடியாது என்றும் கூறினார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், பாக்ஸ் ஆஃபிஸில் பெரும் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.