நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் 10 ஆண்டுகளைக் கடந்ததை அடுத்து பலருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த முதல் திரைப்படமான மெரினா கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான நிலையில் இன்றுடன் அவர் திரையுலகிற்கு வந்து 10 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்றோடு சினிமாவில் பத்தாண்டுகள். நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்த பயணம். இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இடம் நான் நினைத்து கூட பார்த்திராத நிஜம். இத்தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பு அளித்த இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கும், அத்தனை தயாரிப்பாளர்களுக்கும், உடன் நின்று பயணித்த இயக்குனர்களுக்கும், தன்னோடு சேர்த்து என்னையும் மிளிர செய்த என் சக கலைஞர்களுக்கும், என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், பத்திரிகை, தொலைக்காட்சி, இணைய தள நண்பர்களுக்கு,ம் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, எனது தாய் தமிழுக்கும் என்னை மகனாக, சகோதரனாக, நண்பனாக, குடும்பமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கும் என் ஆரம்பகாலம் முதல் என்னுடைய வெற்றி தோல்வி அனைத்திலும் உடனிருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள். எப்போதும் நாம் செய்ய நினைப்பதை எல்லாம் இன்னும் உழைத்து உங்களை மகிழ்விப்பதும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வை பிறருக்கு பயன்படுமாய் வாழ்வது மட்டுமே. எனக் கூறியிருந்தார்.
இந்த அறிக்கையில் பலருக்கும் நன்றி தெரிவித்துள்ள நிலையில் அவரின் நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான ஆர் டி ராஜா பற்றி ஒரு வார்த்தையும் இல்லை. சிவகார்த்திகேயனை முன்னணி கமர்ஷியல் நடிகராக ஆக்கியதில் ஆர் டி ராஜாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இப்போது பிரிந்துள்ளனர்.