“சூப்பர்ஸ்டார்” என்று அனைவராலும் பெருமையாக அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகரான ரஜினி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ ‘பில்லா’, ‘போக்கிரிராஜா’, ‘முரட்டுக்காளை’, ‘தில்லு முல்லு’ ‘வேலைக்காரன்’, ‘பணக்காரன்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘எங்கேயோ கேட்டக் குரல்’, ‘மூன்று முகம்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’ ‘நான் சிவப்பு மனிதன்’, ‘ஸ்ரீராகவேந்திரா’ படிக்காதவன்’, ‘மாவீரன்’, ‘ஊர்காவலன்’, ‘மனிதன்’, ‘குரு சிஷ்யன்’, ‘மாப்பிள்ளை’ ‘தளபதி’, ‘மன்னன்’, ‘அண்ணாமலை’, ‘பாண்டியன்’, ‘எஜமான்’, ‘உழைப்பாளி’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘அருணாசலம்’, ‘படையப்பா’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ என சொல்லிக்கொண்டே போகலாம். ரஜினியின் நடிப்பில் வெளிவந்த இந்த படங்கள் அனைத்தும் நம்மால் மறக்கமுடியாத திரைப்படங்களாகும்.
"சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட சின்ன குழந்தைகளை சொல்லும்" ... என்ற அந்த வரி ரஜினிக்கு அவ்வளவு கட்சிதமாக பொருந்தும்.இவர்தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவையும் தாண்டி , ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும், தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்த ஒரே நடிகன் ரஜினி .
ஒரு நடத்துனராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சினிமா துறையில் ஒரு மாபெரும் கதாநாயகனாக சாதனைப் படைத்த ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறும் அவரின் சாதனைகளையும் கொஞ்சம் திரும்பு பார்த்தோமானால் எக்கச்சக்கமாக கொட்டி கிடக்கின்றது.
‘சிவாஜி ராவ் கைக்வாட்’ என்பது தான் சூப்பர் ஸ்டார் ரஜினியோட இயற்பெயர். இது நம்மில் பலருக்கும் இது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை, நமக்கு தெரிந்ததெல்லாம் சூப்பர் ஸ்டார் மட்டும் தான்.
1949ல டிசம்பர் மாதம் 12 ஆம் நாள் பெங்களூரில் ராமோசி ராவ் காயக்வடுக்கும், ரமாபாயிக்கும் நான்காவது மகனாக ஒரு “மராத்தி” குடும்பத்தில் பிறந்தார்.
தன்னுடைய ஐந்தாவது வயதில், அம்மாவை இழந்த ரஜினிகாந்த் , பெங்களூரில் உள்ள பள்ளிப்படிப்பை முடித்தார்.
சிறு வயதிலேயே பயம் என்றால் என்னன்னே தெரியாதவராகவும் , துணிச்சல் மிக்கவராகவும் இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்தப் பிறகு, ஒரு நடத்துனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய அவர், பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். காலப்போக்கில், தன்னோட நடிப்பின் மீது ஏற்பட்ட ஆவலால், நடிகராகும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் தன் நண்பன் ஒருவரின் உதவியோடு “சென்னை திரைப்படக் கல்லூரியில்” சேர்ந்தார். 1975 ல் , கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரையுலக வாழ்க்கையை தொடங்கிய அவர்,
1976ல் “கதா சங்கமா” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். பிறகு, அதே ஆண்டில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “மூன்று முடிச்சு” திரைப்படம் அவரை ஒரு சிறந்த நடிகனாக இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டியது. இந்த திரைப்படத்தில் ஒரு பெண்ணாசை பிடித்த நடிகராக நடிச்சு சிறப்பாக தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு வாய்க்கு கொண்டுவரும் அந்த ஸ்டைலினை, இந்த படத்தில் அற்புதமாக செய்திருப்பார். அதனை தொடர்ந்து ‘அவர்கள்’ (1977), ‘16 வயதினிலே’ (1977), ‘காயத்ரி’ போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார்.
மாபெரும் எதிர்பார்ப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 2002 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்திலும், ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் வெளிவந்த “பாபா” திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியைத் தரவில்லை என்றாலும், 2005 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த “சந்திரமுகி” திரைப்படம் மற்றும் 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த “சிவாஜி” திரைப்படம் நல்ல வசூலை பெற்றுத்தந்தது.
பிறகு மீண்டும் ஷங்கருடன் இணைந்து, அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட “எந்திரன்’ திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, பல சாதனைகளை படைத்ததோடு மட்டுமல்லாமல், தமிழ் சினிமா வரலாற்றில் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியது.
ரஜினிகாந்த் அவர்கள், தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின் போது ஆளுங்கட்சியாக இருந்த அ.இ.ஆ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் கருத்து கூறியதால் அக்கட்சி தோற்றதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதன் பிறகு, ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக பல கேள்விகள் எழுப்பப்பட்டு கடைசியாக ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தில் தான் அரசியலில் வரப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ரஜினிகாந்த் அவர்கள், ஒவ்வொரு படம் நடித்து முடித்து அந்த படம் திரைக்கு வந்ததும், இமயமலைக்குச் செல்வதையும், அங்குள்ள ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். சினிமா, பணம், புகழ் என பல சிகரத்தை தொட்டுப்பார்த்தாலும், அவருக்கான தேடல் ‘இமயமலை பயணம்’ என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் .
“தில்லு முல்லு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது, லதா ரங்காச்சாரியை முதன் முதலாக சந்தித்தார். சென்னையிலுள்ள “எத்திராஜ் கல்லூரியில்” படித்துக் கொண்டிருந்தபொழுது, ரஜினியை பேட்டி எடுக்க லதா அவர்கள் சென்றிருந்தார். அந்த பேட்டியின்போதே “தன்னை மணக்க விருப்பமா?” என்று ரஜினிகாந்த் கேட்க, “வெட்கத்தோடு பெற்றோரிடம் கேளுங்கள்!” என்று லதா சொல்லிவிட்டார். பிறகு, ஒய்.ஜி மகேந்திரனின் உதவியுடன் (லதாவின் சகோதரி சுதாவை இவர் மணந்துள்ளார்) லதாவின் பெற்றோரிடம் சம்மதம் பெற்ற அவர்கள், 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இருமகள்கள் உள்ளனர்.
தனக்கென ஒரு பாதையில் ஸ்டைலான நடிப்பில் அசைக்கமுடியாத ராஜாவாக நடைபோட்டு வரும் ரஜினிகாந்த் அவர்கள், திரையுலகில் மட்டும் ‘சூப்பர்ஸ்டார்’ என இல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் சூப்பர்ஸ்டாராக வாழ்ந்து வருகிறார். பணம், புகழ், அந்தஸ்து என அனைத்திலும் நிறைவைப் பெற்றுவிட்டாலும், இன்று வரை அவர் சாதாரண மனிதராக ஒரு எளிமையான வாழ்க்கையயை மட்டுமே வாழ விரும்புகிறார். தன்னம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியையும் கொண்டு கடுமையாக உழைத்தால் வாழ்கையில் முன்னேறலாம் என்ற பாடத்தை கற்றுத்தந்துள்ளார்.
ஒரு சாதாரண மனிதராக இந்த உலகத்துக்கு வந்து தன் விடா முயற்சியால் மிகப்பெரிய ஜாம்பவானாக உயர்ந்து நிற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் இன்று தனது 69 பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ள அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.