Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவாஜி ஃபார் 90’ஸ் கிட்ஸ்: சிவாஜி பிறந்தநாள் பகிர்வு- பகுதி 2

Advertiesment
சிவாஜி ஃபார் 90’ஸ் கிட்ஸ்: சிவாஜி பிறந்தநாள் பகிர்வு- பகுதி 2
, திங்கள், 1 அக்டோபர் 2018 (17:04 IST)
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் தொன்னுறாவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த நாளை முன்னிட்டு 90’ஸ் கிட்ஸ்களாகிய இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டிய இரண்டு முக்கியமான படங்கள் பற்றிய பதிவு.

1980களில் தனது சகப் போட்டியாளரான எம்ஜிஆர் திரைத்துறையில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்டதும் ரஜினி, கமல் போன்ற இளம் கதாநாயகர்கள் வருகையாலும் சிவாஜியின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத்தொடங்கியது.

பாரதிராஜா, பாலு மகேந்திரா மற்றும் மகேந்திரன் போன்ற இயக்குனர்களின் எதார்த்த பாணியிலான படங்கள் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தத் தொடங்கின. இந்த காலத்தில் சிவாஜியும் கதாநாயகனாக நடிப்பதைக் குறைத்துக் கொண்டு குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்திருந்தார். ஆனாலும் அவை யாவும் சிவாஜியின் முழு நடிப்புத் திறனையும் வெளிக்கொண்டு வரவில்லை.
webdunia

1985-ல் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி மற்றும் ராதா நடிப்பில் வெளியானது முதல் மரியாதை திரைப்படம். இப்படத்தில் மத்திய வயது ஊர்ப் பெரியவர் மலைச்சாமியாக நடித்திருந்தார் சிவாஜி. மலைச்சாமியின் மனைவி ஊரில் உள்ள அனைவரிடமும் வம்பிழுத்து பிரச்சனைகளை உருவாக்கும் மனைவி பொன்னாத்தா. வீட்டுக்கு வெளியே சந்தோஷமாக அனைவராலும் மதிக்கப்படும் மனிதராக இருக்கும் அவருக்கு வீட்டில் கொஞ்சம் கூட நிம்மதியும் இல்லை. அந்த வெறுமையை, மனைவியிடம் திட்டுகளை வாங்கிக்கொண்டு இறுக்கமான முகத்தோடு வயலுக்குக் கிளம்பும் மலைச்சாமி வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் பறவைகளையும் வானத்தையும் பார்த்து மகிழும் அந்த சிரிப்பில் வசனங்கள் ஏதுமின்றி வெளிப்படுத்தி விடுவார். அவருக்கு ஒரு ஆறுதலாக அந்த ஊருக்கு வந்து சேர்கிறார் பரிசல்காரரின் மகள் குயில்.

பரிசலில் அடிக்கடி வெளியூர்ப் போய் வரும்போது குயிலின் குழந்தைத் தனமானப் பேச்சும் தைரியமான குணமும் அவருக்குப் பிடித்துவிட இருவருக்குள்ளும் ஓர் ஆழமான உறவு ஏற்பட்டு விடுகிறது. காதல், காமம் தாண்டிய ஓர் உறவாக அவர்கள் இருவருக்குமிடையில் இருக்கும் உறவை தன் மனைவி மற்றும் ஊரார் சந்தேகப்பட ஊரார் முன் பஞ்சாயத்தில் கோபப்படும் காட்சி 90ஸ் கிட்ஸ் மட்டுமல்லாமல் பழைய சிவாஜி ரசிகர்களுக்கும் மறக்க முடியாத காட்சியாகும்.

தன் மானத்தைக் காப்பாற்ற ஜெயிலுக்கு செல்லும் குயிலின் வருகைக்காக அவளது குடிசையிலேயே சென்று தங்கி மரணப்படுக்கையில் அவளது நினைவுகளை தாங்கி அவளின் ஒரு நிமிடப்பார்வைக்காக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார் சிவாஜி.

பட்டனத்தில் இருக்கும் மகனின் வருகைக்காக காத்திருக்கும் தந்தைக்கு, மகன் தன் தோழியையையும் கூட்டி வந்திருப்பது சற்றே அதிர்ச்சி. மகன் அந்தப் பெண்ணைதான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக சொல்லும் போது அதிர்ச்சி கோபமாக மாறுகிறது. சற்றே ஆதிக்க ஜாதி மனோபாவம் கொண்ட கோப்மான தந்தையை அப்படியே நம் கண்முன் நிறுத்துகிறார் சிவாஜி.

பெரிய மகன் குடிபோதையில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகையில் தன் சொத்துகளைக் காப்பாற்றவும் ஊர் மக்களுக்கு தன் தம்பி மகன் மாயனிடம் இருந்து பாதுகாப்பாகவும் இருப்பான் என நினைத்திருந்த தன் இரண்டாவது மகன் ஊரைவிட்டே போகிறேன் என்று சொல்லும் போது ஏமாற்றம், தன்னையும் இந்த ஊரை விட்டுக் கூட்டிப் போகிறேன் என தன் மகன் கூறும் போது இந்த ஊரின் மீது உள்ள பாசத்தில் கலங்கி அழுவது, சிறுகுழந்தை ஒன்றின் இறப்பைப் பார்த்துவிட்டு சாப்பிட மறுக்கும் தன் மகனிடம் தேற்றி சொல்லி சாப்பிட வைக்கும் மன உறுதி என படத்தின் முதல் பாதி முழுவதும் சிவாஜி ராஜ்யம்தான்.

தாழ்வாரத்தில் மழைப் பெய்யும் ஓசையே பின்னணி இசையாக தந்தையும் மகனும் பேசிக்க்கொள்ளும் காட்சி தமிழ் சினிமாவில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் ஒன்று. பஞ்சாயத்தில் பதில் பேச விடாமல் தன்னை மடக்கிய நாசரின் மேல் கோபப்பட்டு அங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு நடந்து செல்லும் வழியில் ஒவ்வொருவரையும் திட்டிக்கொண்டே சென்று வீடு வந்தவுடன் பேத்திகளைப் பார்த்தவுடன் அவர்களுடன் சந்தோஷமாக பேசிக்கொண்டு வீட்டுக்கு செல்வது என்று நடிப்பின் பல பரிமாணங்களை எந்தவித மிகைநடிப்பும் இன்றி தேவர் மகனில் வெளிப்படுத்தி இருப்பார் சிவாஜி.

சிவாஜி ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையில் அவர் நடிப்பில் உச்சத்தைத் தொட்ட படங்கள் என இந்த இரண்டு படங்களையும் சொன்னால் தமிழ்கூறும் நல்லுலகம் மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக்கொள்ளும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்தவுடன் விஜயலட்சுமி போட்ட முதல் டுவிட்!