கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்ட மீ டூ விவகாரத்தில் முதல் முதலாக குற்றம் சுமத்தப்பட்டவர் ஒருவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகப் பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக புகாரை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து பல பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களை சின்மயி மூலமாக வெளிப்படுத்தத் தொடங்கினர். இது மெல்ல மெல்ல ஒரு இயக்கமாக மாறியது.
ஆனால் இதுவரை குற்றம்சுமத்தப்பட்ட ஒருவர் கூட தவறுக்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்கவில்லை. மீடூ விவகாரப் பரபரப்புகள் அடங்கி சில மாதங்களுக்குப் பிறகு குற்றம் சுமத்தப்பட்ட பாடகர் கார்த்தி வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரியுள்ளார்.
தனது டிவிட்டர் பக்கத்தில் இதுசம்மந்தமாக நீண்டப் பதிவினைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘சமீபகாலமாக ட்விட்டரில் என்னைப் பற்றி அநாமதேய புகார்கள் முன்வைக்கப்பட்டன. நான் எனது மனசாட்சிக்கு உண்மையாகவே இருக்கிறேன். எந்தவொரு நபரையும் அவரது எதிர்ப்பைக் கடந்து தொல்லை செய்தது இல்லை. கடந்த காலங்களில் எனது செய்கையால் யாராவது வருந்தியிருந்தால் தயை கூர்ந்து அவர்கள் என்னை நேரடியாக அணுகுமாறு வேண்டுகிறேன். எனது தவறுகளுக்கான விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன். மீ டூ இயக்கத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எனக்கு எதிரான புலம்பல்களின் பின்னணியில் உண்மை இருக்குமேயானாலும் நான் அதற்காக மன்னிப்பு கோரவும் தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படவும் தயாராக இருக்கிறேன். யாருடைய வாழ்க்கையிலும் என்னால் கசப்புணர்வு இருக்கக் கூடாது.’ எனக் கூறியுள்ளார்.
மேலும் சமீபகாலமாக வெளிஉலகில் அதிகமாக தலைகாட்டாமல் இருப்பது குறித்து பதிலளித்துள்ள அவர் ‘கடந்த சில மாதங்களாக எனது தந்தை மிகவும் மோசமான உடல் நிலையில் இருக்கிறார். அதனால் தான் நான் ஒத்துக்கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியவில்லை. எனது தந்தையின் உடல்நலன் தேற எனது நண்பர்களும் நலன் விரும்பிகளும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகிறேன்.’ என உருக்கமாகக் கூறியுள்ளார்.