கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். அந்த ஷூட்டிங் முடிந்தபின்னர்தான் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என தெரிகிறது. இப்போது ஆந்திராவில் இந்தியன் 2 ஷூட்டிங் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் தொடக்கத்தில் ஒரு கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனை இந்த படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் ஆசைப்பட்டாராம். ஆனால் ஷூட்டிங்கின் போது ஏதோ சில காரணங்களால் அந்த முடிவை கைவிட்டுவிட்டார் என சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்காக எழுதிய கதாபாத்திரத்தில்தான் இப்போது சித்தார்த் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.