சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸாகிறது.
சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. ஆனால் இன்னமும் ரிலிஸ் ஆகாமல் உள்ளது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா இப்போது ரிலிஸுக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் சீனு ராமாமி “மாமனிதன் படத்திற்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இசையமைக்க முடிவானது. அதன் பிறகு, கார்த்திக் ராஜா வெளியேறினார். நான் தாலாட்டு கேட்டதே அவரது அன்னக்கிளி பாட்டாகத்தான் இருந்திருக்கும். இந்தப் படத்தை யுவன் தயாரிப்பதால் ஒரு சிறந்த படமாக ஆக்க வேண்டும் என்பதற்காக, கதைக்களத்தை பண்ணை புரத்திற்கு மாற்றினேன். இளையராஜா சார் வீடு இருக்கும் தெருவில்தான் கேமரா வைத்து முதல் ஷாட்டை எடுத்தேன். குறுகிய மொத்த படப்பிடிப்பையும் முடித்துக்கொடுத்தேன்.
மாமனிதன் படத்தின் பாடல் காட்சிகள் எல்லாம் மெட்டமைக்கும் முன்னரே படமாக்கிவிட்டோம். அதன் பிறகுதான் பாடல் உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தின் பாடல் கம்போஸிங், ரீரெக்கார்டிங் எதிலும் நான் அனுமதிக்கப்படவில்லை. படத்துக்கு யார் பாடல் எழுதுகிறார்கள் என்பதே தெரியவில்லை. யுவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஒருவர் வந்து என்னிடம் நான் உங்கள் படத்தில் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன் எனக் கூறுகிறார். இளையராஜாவின் இசையை நான் பாராட்டுகிறேன். அவரை படத்தின் முதல் மாமனிதனாக நினைக்கிறேன். ஆனால் காரணமே இல்லாமல் என்னை ஏன் நிராகரிக்கணும். காரணமில்லாத நிராகரிப்பு எனக்கு அதிக வலியைக் கொடுத்துள்ளது” எனப் பேசியுள்ளார்.
முன்னதாகவே சீனு ராமசாமிக்கும் யுவனுக்கும் இடையே படம் சம்மந்தமாக கருத்து வேறுபாடு எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனால் படம் தாமதம் ஆவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது பட ரிலீஸ் சமயத்தில் சீனு ராமசாமியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.