விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார்.
இந்த படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து, தங்கள் கருத்தை கேட்காமல், இந்த படத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று சர்கார் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும் சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வருண் (எ) ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், ‘செங்கோல் என்ற தலைப்பில் நான் கதை எழுதினேன். இந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். இந்த நிலையில், என்னுடைய கதையை திருடி, சர்கார் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்கியுள்ளார்.
இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தேன். அந்த சங்கத்தின் தலைவர் கே.பாக்கியராஜ், இருதரப்பையும் அழைத்து விசாரித்தார்.
இறுதியில், இருவரது கதையும், ஒரே கதை தான் என்று உத்தரவிட்டுள்ளார். எனவே, சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்த படத்தின் கதை என்னுடையது என்றும் அறிவிக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் எம்.புருஷோத்தமன் நீதிமன்றத்தில் புதன்கிழமை முறையிட்டார். அதற்கு பதிலளித்த உயர்நீதிமன்றம், ‘ஏற்கனவே எதிர்தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கு மனுவை எதிர்தரப்பினருக்கு வழங்க வேண்டும். இந்த வழக்கு வியாழக்கிழமை (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.