இயக்குனர் அமீர் குறித்து பேசியதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்வினையாக சமுத்திரக்கனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2007ம் ஆண்டு வெளியான படம் பருத்திவீரன். இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்தார். படம் வெளியான அந்த சமயமே படத்தை பாதியில் ஞானவேல்ராஜா அமீரிடம் ஒப்படைத்து விட்டதாகவும், மீத பணத்தை அமீர் கடன் வாங்கி படத்தை எடுத்து முடித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அமீரை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசிய விதம் கடும் சர்ச்சைக்கு உள்ளானது.
அமீருக்கு ஆதரவாக இயக்குனர் சமுத்திரக்கனி, சசிக்குமார், பொன்வண்ணன் என பலரும் பேசத் தொடங்கிய நிலையில் தான் அமீரை அவ்வாறு பேசியதற்கு வருந்துவதாக ஞானவேல்ராஜா அறிக்கை விட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு சில கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி.
அதில் அவர் “பிரதர் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. நீங்க செய்ய வேண்டியது. எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்துகிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்றை வாரி இறைச்சீங்களோ அதே பொதுவெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்.
நீங்க கொடுத்த அந்த கேவலமான தரங்கெட்ட இண்டெர்வியூவை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்..!
அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டு போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திரும்ப குடுக்கணும். ஏன்னா கடனா வாங்குன நிறைய பேருக்கு திரும்ப கொடுக்க வேண்டியது இருக்கு.
அப்புறம் பருத்திவீரன் படத்தில வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம் அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க. நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே.
காலம் கடந்த நீதி.. மறுக்கப்பட்ட நீதி..!” என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.