Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

9 வருடமாக போராடிய என்னை இயக்குனராக்கியது ராமராஜனின் ராசியான கை தான் கே.எஸ்.ரவிக்குமார்!

9 வருடமாக போராடிய என்னை இயக்குனராக்கியது ராமராஜனின் ராசியான கை தான்  கே.எஸ்.ரவிக்குமார்!

J.Durai

, சனி, 30 மார்ச் 2024 (12:29 IST)
எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில்  உருவாகியுள்ள  படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப் பிறகு ‘மக்கள் நாயகன்’ ராமராஜன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார்.
 
அதுமட்டுமல்ல. ராமராஜனின் திரையுலக பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்த இசைஞானி இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார்
 
தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய  படங்களை இயக்கிய இயக்குநர் R.ராகேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் கதை எழுதியுள்ளார். கதாநாயகிகளாக நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி நடிகின்றனர். 
 
முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், லியோ சிவகுமார், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி, போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
 
ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை  ராம்கோபி கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைத்திருக்கிறார்.
 
படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ‘சாமானியன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.  
 
இந்த நிகழ்வில் நாயகன் ராமராஜன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே.எஸ் ரவிக்குமார், ஆர்வி உதயகுமார், பேரரசு, சரவண சுப்பையா, ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 
 
 அப்போது இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் பேசும்போது 
 
“ரஜினி சாரே ஒருமுறை என்னிடம் ராமராஜன் பற்றி குறிப்பிடும்போது, அவருக்கு இருக்கும் அந்த மாஸ் ஓப்பனிங் கலெக்சனை பார்த்து, நமக்கு போட்டியாக முன்னாடி போய்க் கொண்டிருக்கிறார் என பயந்துவிட்டேன் என்று கூறினார். நான் பல வருடங்களாக உதவி இயக்குநராக பணியாற்றிய சமயத்தில் அந்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறாத நிலையை நான் பணியாற்றிய முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றால் அது ராமராஜன் நடித்த ‘ராஜா ராஜா தான்’ நான் அதற்கு முன் பல படங்கள் பணியாற்றி இருந்தாலும் முதன்முதலில் ஸ்டார்ட் கட் ஆக்சன் சொன்னது ராமராஜனுக்கு தான். ராஜ்கிரண் தயாரிப்பில், கஸ்தூரிராஜா கதை, வசனம் எழுதிய ‘பெத்தவ மனசு’ படத்தில் நான்  இணை இயக்குனராக பணியாற்றினேன். அந்த படத்தில் ராமராஜன் ஹீரோ மற்றும் டைரக்டராக இருந்ததால் அவர் நடிக்கும் காட்சிகளை நான் தான் அவருக்கு ஸ்டார்ட் ஆக்சன் சொல்லி இயக்கினேன். அதுதான் என்னுடைய பிள்ளையார் சுழி. அதன்பிறகு ராஜ்கிரன் ஹீரோவாகிவிட்டார். கஸ்தூரிராஜா இயக்குநராகிவிட்டார். நானும் புரியாத புதிர் மூலமாக இயக்குநர் ஆகிவிட்டேன். 1981 லிருந்து 9 வருடங்கள் வரை ராசி இல்லாத சூழல் இருந்த நிலையில் ராசியான மனிதரான ராமராஜன் மூலமாக எனக்கு எல்லாமே சென்டிமென்ட் ஆக மாறியது. இதுதான் எனக்கும் அவருக்குமான பந்தம். 
 
இந்த படத்தில் நடிக்க இயக்குநர் ராகேஷ் வந்து அழைத்தபோது ராமராஜன் இருக்கிறார் என்றால் நான் ஒரு நாள் வந்து போகும் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க தயார் என்று கூறி விட்டேன். அவர் ஏன் இப்படி நடக்கிறார், இருக்கிறார் என்று யாரும் அவரை தவறாக நினைக்காதீர்கள். அந்த விபத்திற்கு பிறகு தான் அவருக்கு இப்படி ஆகிவிட்டது. அவர் இப்போது நம்முடன் இருக்கிறாரே என்றால் அது அந்த ஆண்டவனின் அருள் தான். அவருடன் காரில்  சென்றவர்கள் எல்லாம் விபத்தில் இறந்துவிட கடவுள் அருளால் உயிர் பிழைத்த அவர். இன்று மீண்டு வந்து மீண்டும் கதாநாயகனாக இளையராஜாவின் இசையில் பாடுகிறார் என்றால் அதுதான் இறைவனின் அருள்.
 
இந்த நிகழ்விற்கு இளையராஜா வரவில்லை.. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர் வீட்டிலும் சில நாட்களுக்கு முன் சோக நிகழ்வு நடந்தது. பரவாயில்லை... ராமராஜனின் அடுத்த படத்திற்கும் அவர்தான் இசையமைக்கிறார் என்பதால் அப்போது பார்த்துக் கொள்வோம். இளையராஜாவுடன் நான் அவ்வளவு நெருங்கி பழகியது இல்லை என்றாலும் நான் ‘ராஜா ராஜா தான்’ படத்தில் பணியாற்றிய போது அந்த படத்திற்கு இசையமைத்தது இளையராஜா தான். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து ஏவிஎம் தயாரிப்பில் சக்திவேல் என்கிற படத்தை இயக்கியபோது அதற்கு இளையராஜா தான் இசை அமைத்தார். அப்போது ஒரு பாடல் இதுபோல வேண்டும் என நான் உதாரணமாக சொல்லும் போது என்னுடைய முந்தைய படமான புருஷ லட்சணம் படத்தில் இருந்து கோலவிழியம்மா என்கிற சாமி பாடலை பாடிக் காட்டினேன். 
 
அதன் பிறகு வெளியே வந்ததும் ஏவிஎம் சரவணன் என்னை அழைத்து அது தேவா சார் பாட்டு. அதை ஏன் இளையராஜாவிடம் சொன்னாய், இருவரும் போட்டியாளர்களாச்சே என்று என்னை செல்லமாக கடிந்து கொண்டார். அதன் பிறகு மதியம் அதேபோன்று இன்னொரு பாடலுக்காக அமர்ந்த போது இதற்கு என்ன பாடல் இன்ஸ்பிரேஷனாக சொல்லப் போகிறாய் என்று ராஜா சார் கேட்டார். உடனே சுதாரித்துக் கொண்டேன். அப்போது எனக்கு ராமராஜன் சார் தான் ஞாபகம் வந்தது. உடனே மாங்குயிலே பூங்குயிலே போல ஒரு பாடல் வேண்டுமென கேட்டேன். அப்படித்தான் ‘மல்லிகை மொட்டு மனச தொட்டு’ என்று ஒரு பாடலை போட்டு தந்தார். அந்த பாடல் அப்போது மிகப்பெரிய ஹிட் ஆகி இப்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. என்னுடைய வாழ்க்கையில் அந்தந்த சமயங்களில் நடக்கும் சம்பவங்களில் எல்லாமே ஒருவர் உள்ளே வருவார்.. அவர் தான் ராமர்.. ராமராஜன்” என்றார்.
 
மக்கள் நாயகன் ராமராஜன் பேசும்போது 
 
“2010ல் நான் மீட்டிங் போய் விட்டு வரும்போது மிகப்பெரிய விபத்தை சந்தித்தேன். மயிரிழையில் உயர் தப்பினேன் என்று சொன்னால் சரியாக இருக்கும். அதிலிருந்து மீண்டு வந்து நான் இப்படி ஒரு படம் நடிப்பேனா என்பது உலக அதிசயம் போல நடந்திருக்கிறது. ஏனென்றால் என்னுடைய ரசிகர்களின் தமிழக மக்களின் பிரார்த்தனை தான்.. இந்த ரசிகர் மன்றங்களுக்கும் நான் எதுவும் செய்ததில்லை. ஆனால் எனக்காக உயிரை தரக்கூடிய அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார்கள்
 
இயக்குநர் ராகேஷ் எனக்கு அன்றும் இன்றும் என்றும் பொருந்துகின்ற மாதிரி அருமையான திரைக்கதையில் இந்த படத்தை எடுத்துள்ளார். இதன் ட்ரெய்லரையும் பாடல்களையும் நான் ஒரு டெக்னீசியனாகத்தான் பார்த்தேன். இதற்கு விளம்பரமே கொடுக்க வேண்டாம்.. ராமராஜன் படம் என்றால் பார்ப்பதற்கு லட்சம் பேர் இருக்கிறார்கள்.. இந்த படத்தின் திரைக்கதை என்பது உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இதை கடக்காமல் போகவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு அருமையான கதை இது. படம் பார்த்து விட்டு வரும்போது தாய்மார்கள் மட்டுமல்ல, என்னுடைய ரசிகர்களும் ஆண்களும் கூட கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் அளவிற்கு ஒரு கதை. இந்த அளவிற்கு அழகாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ராகேஷ். இன்று ராஜா அண்ணன் வருவார் என நினைத்திருந்தேன். அவர் வராததால் மனதிற்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. இந்த 23 வருடங்களிலும் என்னை ராமராஜன் என்று சொல்கிறார்கள் என்றால் இளையராஜாவின் பாட்டு தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று பல இடங்களில் இளையராஜா, ராமராஜன் பாடல்களை தான் கேட்கிறேன் என்கிறார்கள்.
 
கே எஸ் ரவிக்குமார் இங்கே இருக்கும்போது சில விஷயங்களை பேச வேண்டும்.. நான் நடித்த ராஜா ராஜா தான் படத்தில் இயக்குநர் ஈ.ராமதாஸிடம் கே.எஸ் ரவிக்குமார் துணை இயக்குனராக வேலை பார்த்தார். நானும் 40 படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்தவன் என்கிற வகையில், அப்போதே  அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் கே எஸ் ரவிக்குமாரின் திறமையை பார்த்து ஆச்சரியப்பட்தென். அதன்பிறகு நான் நடித்து இயக்கிய ‘பெத்தவ மனசு’ படத்தில் என்னுடன் இணைந்து இணை இயக்குநராக பணியாற்றினார். இத்தனை வருடங்கள் கழித்து ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்களை இயக்கும் அளவு புகழ்பெற்ற அவர் மீண்டும் என்னை சந்திக்கும் போது அவர் காட்டிய அந்த மரியாதையை பார்த்த போது சினிமாவில் உண்மை, நன்றி, விசுவாசம் இன்னும் சாகவில்லை.. உயிரோடு இருக்கிறது என்று நினைக்க வைத்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.
 
கரகாட்டக்காரன் 465 நாள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே தொடர்ந்து எட்டு 100 நாள் படங்களையும் கொடுத்தேன். இந்த படத்தில் பாட்டே இல்லாமல் படம் கொடுத்து இருக்கிறாயே என்று ராஜா அண்ணன் என்னிடம் கேட்டார். இந்த படத்தில் எனக்கு ஜோடியே கொடுக்கவில்லை. எனக்கு ஜோடி எம் எஸ் பாஸ்கர், ராதாரவி அண்ணன் தான்.. சரி ஒரு படம் தியாகம் பண்ணிவிட்டு போவோம் என விட்டுவிட்டேன். ஆனால் அடுத்த படத்தில் ஜோடியும் வேண்டும் பாட்டு வேண்டும்.. இப்போது கூட ஆறு பாட்டுக்குளுடன் ஒரு படம் கொண்டு வா உனக்கு பண்ணித் தருகிறேன் என ராஜா சார் கூறினார். இளையராஜா இதுவரை உலக அளவில் பெற்ற புகழை வேறு எந்த இசையமைப்பாளரும் பெற்றதில்லை. இனியும் பெற முடியாது.
 
தன்னுடைய மூன்று புதல்வர்களையும் இசைக்காக சென்னைக்கு அனுப்பிய அந்த தாய் சின்னத்தாய் அல்ல.. தெய்வத்தாய் மகுடி வாசித்தால் பாம்பு ஆடும். அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அண்ணன் இளையராஜா ஆர்மோனியம் வாசித்தால் பாம்பேயே ஆடும். எனக்கு கொடுத்தது போல் வேறு ஒரு ஹீரோவுக்கு பாடல்களை கொடுக்கவில்லையே என்று சொல்வார்கள். நான் கூட ரஜினி சாருக்கு கொடுத்தது போல எனக்கு பாடல்களை ராஜா சார் கொடுக்கவில்லை என்று கூட சொல்வேன். 
 
ஆனால் “சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா” என்கிற அந்த ஒரு பாடல் எனக்கு போதும். சிங்கப்பூரில் சென்று வேட்டி கட்டி நடித்த ஒரே தமிழ் நடிகர் நான்தான்.. எங்களுடன் ஒரு மாட்டு வண்டியையும் சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதாக இருந்தோம். விமானத்தில் அனுமதிக்கவில்லை.
 
44 படங்களில் நடித்த பின் 45வது படம் இழுத்துக் கொண்டே இருந்தது. ஆனால் சாமானியன் திரைப்படம் சரியான நேரத்தில் என்னை வந்து சேர்ந்தது” என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"வெப்பம் குளிர் மழை"திரை விமர்சனம்