ஆட்டோகிராப் படத்தில் நடிப்பதாக இருந்த பிரபுதேவா மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் நடிக்க முடியாமல் போனது ஏன் என இயக்குனர் சேரன் விளக்கமளித்துள்ளார்.
ஆட்டோகிராப் திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஒரு கலக்கு கலக்கியது. இந்த படம் எவ்வளவு பிரபலமானது என்றால் படத்தின் ஒரு பாடலில் கோபிகா அணியும் சேலையை ஆட்டோகிராப் சேலை என்று சொல்லி தமிழகத்தில் உள்ள ஜவுளிக்கடைகள் விற்கும் அளவுக்கு.
அந்தளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நெருக்கமான படத்தை தமிழின் இரு முன்னணி ஹீரோக்கள் நடிக்க மறுத்த கதையை இயக்குனர் சேரன் பகிர்ந்து கொண்டுள்ளார். சமீபத்தில் அளித்த சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் அவர் அளித்த நேர்காணலில் இந்த படம் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அதில் ‘ ஆட்டோகிராஃப் படத்தில் நடிக்க பிரபுதேவாவைதான் ஒப்பந்தம் செய்திருந்தோம். அட்வான்ஸ் கொடுக்க ஒரே ஒரு நாள் தாமதமானதால் அவர் நடிக்க முடியாது என சொல்லிவிட்டார்.
அதே போல விக்ரமுக்கும் கதை சொல்லி அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். ஆனால் இடையில் ரிலீஸான அவரது ஜெமினி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி விட்டதால் இனிமேல் காதல் கதைகள் வேண்டாம் என அவர் நினைத்து இந்தக் கதையை நிராகரித்துவிட்டார். பிறகு பல ஹீரோக்களிடம் கதை சொன்னேன். ஆனால் யாரும் நடிக்க முன்வராததால் நானே நடித்தேன்’ எனக் கூறியுள்ளார்.