விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார்.
இந்த படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் ரிலிஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த ஆண்டில் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் வரிசையாக பல பெரிய படங்களை ரிலிஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யதான் தயாரிப்பாளர் லலித் முடிவு செய்திருந்தார். ஆனால் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், கதாநாயகன் விஜய் சேதுபதி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் படம் நன்றாக வந்திருப்பதால் கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகி நல்ல பெயரையும் லாபத்தையும் பெற்றுத்தரும் எனக் கூறி திரையரங்கில் வெளியிட வைத்துள்ளார்களாம்.