ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான திரைப்படம் லப்பர் பந்து இந்த படத்தில் கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி சீரிஸில் நடித்து புகழடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடிக்க மற்ற துணை கதாபாத்திரங்களில் பால சரவணன், ஜென்சன் திவாகர் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து மனித உணர்வுகளைப் பேசிய இந்த படம் வெளியானது முதலே பாராட்டுகளைப் பெற்றது. ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் பல காட்சிகளை விசிலடித்துக் கொண்டாடி மகிழ்ந்து பாராட்டி ரசித்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் “வெகு நாட்களுக்குப் பிறகு நான் பார்த்து ரசித்த ஒரு பயம் லப்பர் பந்து. ஸ்போர்ட்ஸ் ட்ராமாக்களில் வழக்கமாக பின்பற்றப்படும் தேய்வழக்குகளைத் தாண்டி உண்மை தன்மைக்கு நெருக்கமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கதாபாத்திரமும் தேவையில்லாமல் உருவாக்கப்படவில்லை. வழக்கமாக தமிழ் படங்களில் வரும் விளையாட்டு சம்மந்தமான படங்களில் கதைக்கருவை விட்டுவிட்டு தாங்கள் சொல்ல நினைத்ததை சொல்வார்கள். அப்படி எதுவும் இல்லாததால் எனக்கு இந்த படம் சிறப்பாக அனுபவத்தை தந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.