சிவகார்த்திகேயன் நடிப்பில் சில ஆண்டுகள் முன்னர் வெளியான டாக்டர் படத்தை நெல்சன் இயக்கி இருந்தார்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது. போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதுபோல யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் நேற்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அட்டகாசமான ஸ்டில் ஒன்றை வெளியிட்டது. அந்த போஸ்டர் வெளியாகி சில நிமிடங்களில் இந்திய அளவில் ட்ரண்ட் ஆகியுள்ளது.
ஆனால் நம் இணையவாசிகள் அந்த போஸ்டரும் சிவகார்த்திகேயனின் டாக்டர் பட போஸ்டரும் ஒரே மாதிரியாக இருப்பதாக கூறி ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளன. இரண்டு போஸ்டர்களிலும் கதாநாயகன் நிற்பது போலவும், பின்னணி சூழல் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதும்தான் இந்த ஒப்பீட்டுக்குக் காரணமாக சொல்லப்படுகிறது.