ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமா இயக்குனரான ராஜமௌலி இந்தியா முழுவதும் தனது படங்களை பல மொழிகளில் டப்பிங் செய்யும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளார். இவரது இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பாகுபலி திரைப்படம் இந்தியாவை தாண்டி பல நாடுகளில் ஓடி புகழ்பெற்றது.
இந்நிலையில் தெலுங்கின் டாப் ஸ்டார்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரின் இணை நடிப்பில் “ஆர்.ஆர்.ஆர்” என்ற படத்தை ராஜமௌலி உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் பழங்குடியின மக்களின் தெய்வமான கோமரம் பீம் தலையில் தொப்பி இருப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக தெலுங்கானா தலைவர் பண்டி சஞ்சய் “கோமரம் பீம் தலையில் தொப்பி வைத்ததற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஏனென்றால் நாங்கள் பழங்குடி மக்களின் நம்பிக்கைகளை மதிக்கிறோம். இதுபோல நிஜாம் அல்லது ஓவைசி படங்களில் பொட்டு வைக்க ராஜமௌலிக்கு தைரியம் உள்ளதா? நாங்கள் ராஜமௌலிக்கோ, ஆர்.ஆர்.ஆர் படத்திற்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் இந்து மத உணர்வுகளை புண்படுத்தவும் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.