தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை என நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிடும் போது, வழக்கம்போல் “ இன்று நான் நடிகன். நாளை நான் யார் என்பதை கடவுள் முடிவு செய்வார்” என தனது டிரேட்மார்க் கருத்தை தெரிவித்தார். மேலும், நான் அரசியலுக்கு வந்தால் சிலரை பக்கத்தில் அண்ட விட மாட்டேன் என கூறியிருந்தார். இதனால், அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராதாரவி இது பற்றி கருத்து தெரிவித்த போது “ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விரும்பினால் அதை வரவேற்கிறேன். தமிழக மக்களிடம் இருந்து அதிக பணம் மற்றும் புகழை அவர் சம்பாதித்துள்ளார். எனவே, அதை அவர்களுக்கே செலவு செய்ய அவர் தயாராக இருக்கிறார் என நினைக்கிறார்.
தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.