Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் - காலத்தின் கட்டாயம்!

Advertiesment
தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் - காலத்தின் கட்டாயம்!

J.Durai

, வியாழன், 19 செப்டம்பர் 2024 (11:41 IST)
தமிழ் திரையுலகம் எப்போதும் கண்டிராத கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. படம் தயாரிக்க பைனான்ஸ் கிடைப்பதில் தொடங்கி, பட வெளியீடு வரை தயாரிப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவமானங்கள் கணக்கில் அடங்காதவை. முன்பெல்லாம் படம் பூஜை போட்டால் அன்றே  வியாபாரம் நடந்து விடும்.
 
வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் முன் தொகையை வைத்தே படப்பிடிப்புகள் நடக்கும். ஆனால் தற்போது படத்தை எடுத்துவிட்டு விற்க முடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்களின் நிலையை நினைத்தால் பரிதாபமாக உள்ளது.
 
டிஜிட்டல் உரிமை, தொலைக்காட்சி உரிமை, ஹிந்தி டப்பிங் உரிமை போன்றவற்றின் மூலம் படத்தின் பட்ஜெட் பூர்த்தியானால் மட்டுமே அந்த தயாரிப்பாளர்கள் வாங்கிய கடனுக்கு வட்டியை கட்டிவிட்டு நியாயமான ஒரு இலாபத்தை ஈட்ட முடியும். ஆனால் தற்போது பெரிய படங்களுக்கே மேற்குறிப்பிட்ட உரிமைகள் பட வெளியீட்டிற்கு பின்னரே விற்பனையாகிறது. இதற்கு தேவைக்கு அதிகமாக படங்கள் தயாரிக்கப்படுவதே காரணமாகும். உற்பத்தியை குறைத்தால்தான் பொருளுக்கு டிமாண்ட் ஏறும். அதுவே வியாபார தந்திரம் ஆகும்.
 
தற்போதைய சூழலில் படங்கள் தயாரிப்பதை தயாரிப்பாளர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தால் மட்டுமே நிலுவையில் உள்ள படங்களின் உரிமைகள் விற்பனையாகி அந்த படங்கள் வெளியாகும். ஒரு படம் வெளியாகாமல் தேங்கி இருந்தால் நேரடியாக தயாரிப்பாளரும் மறைமுகமாக படத்தின் பைனான்சியரும் நஷ்டமடைகிறார்கள். பைனான்சியர் நஷ்டமடையும் போது   மற்ற படத்திற்கு பைனான்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஆரம்பித்து விடுகிறது.
                                   தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை எதிர்ப்பவர்கள் சுயநலவாதிகள். அவர்களுக்கு தேவையான சம்பளம் உடனுக்குடன் கிடைத்து விடுவதால் தயாரிப்பாளரின் வேதனைகள் அவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை.
 
ஒரு சிறிய ஆய்வின் மூலம் தயாரிப்பாளர்களின் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
 
கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி “வாழை, கொட்டுக்காளி, போகுமிடம் வெகுதூரமில்லை, அதர்மக் கதைகள்” என சொல்லிக் கொள்ளும்படியான நான்கு படங்கள் வெளியாகின. இதில் “வாழை” படத்தின் இயக்குநர் பெரிய இயக்குநர் அந்தஸ்தில் இருந்தாலும், படத்தின் நடிகர்கள் புதியவர்கள். கதாநாயகி மட்டும் ஏற்கனவே சில படங்களில் நடித்தவர்.
 
“கொட்டுக்காளி” படத்தில் சூரி பிரதானமாக நடித்து இருந்தாலும், காமெடியன் என்பதை தாண்டி தற்போது தான்  கதாநாயகனாக முன்னேறி வருகிறார். பட வெளியீட்டின் போதே இது ஒரு ஆர்ட் பிலிம் என்கிற அளவில்தான் புரமோஷன் இருந்தது. “அதர்மக்கதைகள்” படம் புதியவர்களால் உருவாக்கப்பட்டது. “போகுமிடம் வெகுதூரமில்லை” படத்தில் விமல் நாயகன், கருணாஸ் நாயகன் கூடவே பயணிக்கும் மற்றொரு ஹீரோ.
 
மேற்கண்ட நான்கு படங்களில் “போகுமிடம் வெகுதூரமில்லை” தான் பெரிய பட்ஜெட் படம். இந்த படத்தின் நாயகன் விமல் ஏற்கனவே ஏழு சூப்பர் ஹிட் கொடுத்தவர். கருணாஸ் நேர்த்தியான ஒரு நடிகர். 
 
இந்த படத்தில் விமலுக்கு ரூபாய் 50 லட்சமும், கருணாஸுக்கு ரூபாய் 40 லட்சமும் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நான்கு படங்களிலும் இந்த அளவுக்கு யாரும் சம்பளம் வாங்கவில்லை
 
“வாழை” திரைப்படம் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில்    வெளியாகியது. “போகுமிடம் வெகுதூரமில்லை” படம் 102 திரையரங்குகளில் வெளியாகியது. இந்த 102 திரையரங்குகளில் மாயாஜால், கரூர் கவிதாலயா, குளித்தலை லட்சுமி, அந்தியூர் சாய் சிந்து, பழனி சந்தானகிருஷ்ணா ஆகிய 5 திரையரங்குகளில் மட்டுமே 4 காட்சிகளும் திரையிடப்பட்டன. 29 திரையரங்குகளில்  இரண்டு காட்சிகளும், 69 திரையரங்குகளில் ஒரு காட்சியும் திரையிடப்பட்டது. இந்த 69 திரையரங்குகளில் பெரும்பாலானவை மல்டி பிளெக்ஸ்கள். 
 
"வாழை"படம் வெற்றியடைந்ததால் பெரும்பாலான திரையரங்குகள் மறுநாள் அந்த ஒரு காட்சியையும் தூக்கி கடாசி விட்டு
"வாழை"படத்தை திரையிட்டன. 
                              இந்நிலையில் ஒரு வாரம் கழித்து, வசூல் நிலவரத்தை பார்த்த போது தலைசுற்றி கீழே விழுந்தது தான் மிச்சம். நான்கு காட்சிகளும் திரையிட்ட குளித்தலை லட்சுமியில் 15,000 ரூபாயும், கரூர் கவிதாலயாவில் 18,000 ரூபாயும் மட்டுமே வசூலாகி இருந்தது. மொத்தமாக பார்த்த போது 102 திரையரங்குகளிலும் சேர்த்து ரூ.7,12,000/- மட்டுமே வசூலித்திருந்தது. இதில் GST, LBT என வரிகளை கழித்தால் மீதமிருப்பது  ரூ.5,70,000/- மட்டுமே. இதில் விநியோகஸ்தர் கமிஷன் ரூ.80,000 போக மீதிருப்பது ரூ.4,90,000/- இதில் தயாரிப்பாளருக்கு கிடைக்கும் ஷேர் தொகை ரூ.2,45,000/- (ரூபாய் இரண்டு லட்சத்தி நாற்பத்தி ஐந்தாயிரம் மட்டும்) மட்டுமே. முழுசாய் மூன்று லட்சம் கூட தயாரிப்பாளர் ஷேர் தொகை வசூலாகாத படத்திற்கு டிஜிட்டல் புரவைடர்ஸ்(Qube,Ufo,etc) கட்டணம் மட்டுமே ரூ.15,00,000/-, வினைல் பேனர் வைக்க  ரூ.4,00,000/-, போஸ்டருக்கு ரூ.8,00,000/-, மற்றபடி பிரிவியூ ஷோ, சோசியல் மீடியா விளம்பரம் என  மொத்தமாக பட வெளியீட்டிற்கு மட்டும் தயாரிப்பாளர் செலவழித்த தொகை ரூ. 40 லட்சம் ஆகும்.  
webdunia
 
இந்த படத்தின் தயாரிப்பாளர் நிலையை எண்ணி பார்த்தால் மனம் வலிக்கிறது.
 
படத்தயாரிப்பிற்கு ரூபாய் 5 கோடி செலவழித்து, விநியோகிக்க ரூபாய் 40 லட்சம் செலவழித்து விட்டு, அவர் பெற்ற தொகை ரூ.2,45,000/- மட்டுமே. படத்தின் மற்ற உரிமைகள் இதுவரை விற்பனையாக
வில்லை.யாரும் வாங்குவதற்கு முன்வரவில்லை. தயாரிப்பாளர் செலவழித்த மொத்த பணமும் நஷ்டம் என்றால் அவர் என்ன செய்வார்? 
“ BLACK JACK ” போன்ற சூதாட்டத்தில் கூட இன்சூரன்ஸ் என்ற பாதுகாப்பும், பாதி நஷ்டத்துடன் வெளியேறும் பாதுகாப்பும் இருக்கிறது. ஆனால் பட தயாரிப்பில் எந்த பாதுகாப்பும் இல்லை. சூதாட்டத்தை விட மோசமான ஆட்டத்தை தயாரிப்பாளர் சந்தித்து வருகின்றனர். 
 
இந்த நஷ்டத்தை நினைத்து நடிகர்களோ டெக்னீஷியன்களோ வருந்தப்போவதில்லை. நடிகர் விமல் நடிப்பில் இதற்கு முன் வெளியான                                                        “ தெய்வ மச்சான் “ ரூபாய் 7 லட்சமும், “ குலசாமி” 5 லட்சமும்,  “ துடிக்கும் கரங்கள் ”              4 லட்சமும் மட்டுமே வசூலித்திருந்தாலும் அந்த நடிகர் அதற்காக எந்தவித வருத்தமும் அடையவில்லை. மாறாக “போகுமிடம் வெகுதூரமில்லை” படத்திற்கு ரூபாய் 50 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டார். தற்போது கூட சம்பளமாக ரூபாய் 80 லட்சம் கேட்பதாக தகவல் வருகிறது. 5 லட்ச ரூபாய்க்கு கூட மார்க்கெட் இல்லாத நடிகர்கள் 80 லட்ச ரூபாய் சம்பளம் கேட்கும் கலிகாலம் இது.  
 
எனவே படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், படம் தயாரிக்க முன்வருபவர்களும் எந்த வித அவசரமும் படாமல் ஏற்கனவே அந்த நடிகரை வைத்து படம் தயாரித்து வெளியிட்ட தயாரிப்பாளரை அணுகி, வியாபார விபரங்களை தெரிந்து கொண்டு அக்னி பரீட்சையில் இறங்க வேண்டும். 
                                    தற்போதைய சூழலில் இதனையெல்லாம் அலசி ஆராய்ந்து  தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள வேலைநிறுத்த முடிவு வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
 
வேலை நிறுத்தம் ஒன்றே தமிழ் சினிமாவிற்கு புத்துயிரை கொடுக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதிர்பார்த்த அதே தேதி தான்..!