96 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் அடுத்து கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் அவரின் முந்தைய படம் போல நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த பட ரிலீஸின் போதே அவர் தன்னுடைய அடுத்த படம் 96 படத்தின் இரண்டாம் பாகம் என அறிவித்தார்.
அவரின் நேர்காணல் ஒன்றில் “என்னுடைய அடுத்த படம் என்னவென்பது இப்போது வரை முடிவாகவில்லை. 96 படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி வைத்துள்ளேன். முதலில் அதை படமாக எடுக்க வேண்டாம் என நினைத்தேன். ஆனால் எழுதி முடித்ததும் அதை படமாக பார்க்கும் ஆசை எனக்கே வந்துவிட்டது” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இப்போது திரைக்கதையை முடித்துள்ள அவர் வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அதை இயக்கவுள்ளார். இந்நிலையில் கதையைக் கேட்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்குனர் பிரேமைப் பாராட்டி ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.