நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கி நடித்த ‘டீன்ஸ்’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் கோவையை சேர்ந்த கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘டீன்ஸ்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ள பார்த்திபன், அந்த படத்தை ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் ‘டீன்ஸ்’ படத்தின் கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளராக செயல்பட்டு வந்த கோவையை சேர்ந்த சிவபிரசாத் என்பவர் மீது பார்த்திபன் போலீஸ் புகார் அளித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 10 அல்லது 20ஆம் தேதிக்குள் ’டீன்ஸ்’ படத்தின் கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதாகக் கூறி ரூ.68.54 லட்சம் சிவபிரசாத் கேட்டதாகவும், அதற்கு ரூ.42 லட்சம் செலுத்திய நிலையிலும் - குறித்த நேரத்தில் பணிகளை முடிக்காததால் ஏப்ரல் 19 வரை கால நீட்டிப்பு கேட்டதாகவும் பார்த்திபன் தனது புகாரில் கூறியுள்ளார்.
இதனை அடுத்து கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து சிவபிரசாத் என்பவரை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.