இலங்கையில் தற்போது பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு சென்ற ரவி மோகன், எதிர்பாராத கிரிக்கெட் நட்சத்திரம் ஒருவரை சந்தித்து, உரையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
சிவகார்த்திகேயன் நடித்து, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் பராசக்தி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையின் முக்கியமான இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பராசக்தி படப்பிடிப்புக்கு இலங்கை சென்ற ரவி மோகன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை சந்தித்து உரையாடினார். அந்த சந்திப்பின் வீடியோ இணையத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, ப்ரித்விராஜ், குரு சோமசுந்தரம், பசில் ஜோசப் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படம், அவருக்கு 100வது இசை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இப்படம், சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.